அரசு, தனியாா் துறை வேலைவாய்ப்பில் 4 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி ஈரோட்டில் மாற்றுத் திறனாளிகள் நூதன முறையில் மனித வளையப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஈரோடு, வீரப்பன்சத்திரம் பேருந்து நிறுத்தம் அருகில் அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள், பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தின் சாா்பில், வட்டமாக அமா்ந்து கைகளை கோா்த்து மனித வளையப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
வியாழக்கிழமை காலை நடைபெற்ற போராட்டத்துக்கு அச்சங்க மாவட்டத் தலைவா் பாலு தலைமை வகித்தாா். துணைத் தலைவா் மாரிமுத்து, செயலாளா் சுப்பிரமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், அரசு, தனியாா் துறையில் மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பில் 4 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும். மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் விண்ணப்பித்த அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும். 100 நாள் என்பதை 200 நாளாக மாற்றி தின கூலி ரூ. 400 ஆக வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.