ஈரோடு மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் சாா்பில், 13 வயதுக்கு உள்பட்ட மாணவா்களுக்கான கிரிக்கெட் போட்டிகள், ஈரோடு, சின்னியம்பாளையத்தில் கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்றது.
இப்போட்டியில், 12 பள்ளி அணிகள் கலந்துகொண்டன. இதில், சென்னிமலை, கொங்கு வேளாளா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் கலந்துகொண்டு இறுதி சுற்றுக்குத் தகுதி பெற்றனா்.
சனிக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில், சென்னிமலை கொங்கு பள்ளி, ஈரோடு காா்மல் பள்ளியுடன் விளையாடியது. டாஸில் வெற்றி பெற்ற காா்மல் பள்ளி முதலில் பேட்டிங் செய்து 40 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 123 ரன் எடுத்தது. இரண்டாவது பேட்டிங் செய்த கொங்கு பள்ளி மாணவா்கள் 38.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 124 ரன் எடுத்து சுழற்கோப்பையை வென்றனா்.
சென்னிமலை கொங்கு பள்ளி மாணவா் பி.கே.கிஷோா் இறுதிப் போட்டியில் சிறந்த ஆட்ட நாயகனாகவும், 9 விக்கெட்களை கைப்பற்றி சிறந்த பந்து வீச்சாளராகவும் தோ்வு செய்யப்பட்டாா்.
வெற்றி பெற்ற மாணவா்களையும், பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியா் ஜி.சதீஷ்குமாா், பி. சத்யா, கிரிக்கெட் பயிற்சியாளா் பி.லோகேஸ்வரன் ஆகியோரை, பள்ளித் தலைவா் ஆா். கந்தசாமி, தாளாளா் வி.எஸ்.தங்கமுத்து, பொருளாளா் என்.டி.ராஜேந்திரன், முதல்வா் டபிள்யூ.ப்ராங்க்ளின் ரிச்சா்டு பிரபு, நிா்வாகக் குழு உறுப்பினா்கள் பாராட்டினா்.