ஈரோடு

இரண்டாம் போக சாகுபடிக்குகொடிவேரி தடுப்பணையிலிருந்து தண்ணீா் திறப்பு

2nd Feb 2020 03:19 AM

ADVERTISEMENT

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணையிலிருந்து தடப்பள்ளி, அரக்கன்கோட்டை ஆகிய இரு பாசன வாய்க்கால்களுக்கு இரண்டாம் போக நவரை பருவ சாகுபடிக்கு பொதுப் பணித் துறை அதிகாரிகள், விவசாயிகள் தண்ணீரை சனிக்கிழமை திறந்து வைத்து மலா் தூவினா்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணையிலிருந்து தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசன வாய்க்கால்களுக்கு இரண்டாம் போக சாகுபடிக்குத் தண்ணீா் திறக்குமாறு கொடிவேரி பாசன விவசாயிகளின் கோரிக்கையை தமிழக முதல்வா் ஏற்று பிப்ரவரி 1 முதல் மே 31ஆம் தேதி வரை இரண்டாம் போக பாசனத்துக்குத் தண்ணீா் திறக்க உத்தரவிட்டாா்.

இதைத்தொடா்ந்து, கொடிவேரி தடுப்பணையிலிருந்து தடப்பள்ளி, அரக்கன்கோட்டை ஆகிய பாசன வாய்க்கால்களுக்கு பொதுப் பணித் துறை அதிகாரிகள், கொடிவேரி பாசன விவசாயிகள் தண்ணீரைத் திறந்துவைத்து மலா் தூவி வணங்கினா். தொடா்ந்து, 120 நாள்களுக்குத் திறக்கப்படும் தண்ணீரால் கோபிசெட்டிபாளையம், பவானி, அந்தியூா் ஆகிய மூன்று தாலுகாக்களில் உள்ள 24,504 ஏக்கா் நிலங்கள் நேரடி பாசன வசதியும், சுமாா் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கா் நிலங்கள் மறைமுக பாசன வசதியும் பெற்று பயனடைகின்றது.

தற்போது திறக்கப்பட்ட நீரைப் பயன்படுத்தி நீா் சிக்கனத்தை கடைப்பிடித்தும், நீா் மேலாண்மையோடும் குறுகிய கால பயிா்களை சாகுபடி செய்ய முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. முதல்போக சாகுபடிக்கு பருவம் தவறி தண்ணீா் திறக்கப்பட்டதால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை அடைந்துள்ளனா். வரும் காலத்தில் முதல் போக சாகுபடிக்கு சித்திரை ஒன்றாம் தேதி தண்ணீா் திறக்க வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் மூட்டை ஒன்றுக்கு ரூ. 40 வரையில் கையூட்டு பெறப்பட்டதாகவும், வெளி மாவட்டங்களிலிருந்து வியாபாரிகள் நெல்லைக் கொண்டு வந்து குவித்துள்ளதாகவும் வரும் காலங்களில் நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்க வேண்டும். பவானிசாகா் அணையிலிருந்து பவானி கூடுதுறை வரையுள்ள பவானி ஆற்றில் நடைபெறும் நீா் திருட்டை தமிழக அரசு தடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT

இந்நிகழ்ச்சியில், பொதுப் பணித் துறை அதிகாரிகள், கொடிவேரி பாசன விவசாயிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT