ஈரோடு

விளைநிலங்களை கையகப்படுத்தும்போது4 மடங்கு கூடுதல் இழப்பீடுவேளாண் குறைகேட்புக் கூட்டத்தில் வலியுறுத்தல்

1st Feb 2020 05:12 AM

ADVERTISEMENT

சாலைப் பணிக்கு விளைநிலங்களை கையகப்படுத்தும்போது 4 மடங்கு கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும் என வேளாண் குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா்.

வேளாண் குறைகேட்புக் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.கவிதா தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற விவசாயிகளின் கோரிக்கை விவரம்:

தமிழக விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளா் பெரியசாமி: ஈரோடு மாவட்டத்தில் தென்னையைத் தாக்கும் ரூகோஸ் வெள்ளை ஈக்கள் அதிகமாக தென்படுகிறது. அதற்காக கடைகளில் வேளாண் துறை தெரிவிக்கும் மஞ்சள் தாளுடன் கூடிய ஒட்டுண்ணியை ரூ. 900 கொடுத்து பெறுகிறோம். அப்போது அந்த தாளில் பயன்படுத்தும் பசையை சோ்த்து வாங்க வேண்டும் என கட்டாயப்படுத்துகின்றனா். இதனால், இந்த ஒட்டுண்ணியை வேளாண் துறை வாங்கி விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.

ஆந்திர மாநிலத்தில் சற்று தரம் குறைந்த மஞ்சளைக்கூட குவிண்டால் ரூ. 6,835க்கு அரசே கொள்முதல் செய்கிறது. ஈரோட்டில் விளையும் மஞ்சள் அதைவிட தரமானதாக இருந்தும் கடந்த 10 ஆண்டுகளாக விலை கிடைக்காமல் மஞ்சள் விவசாயிகள் மாற்றுப் பயிருக்கு செல்கின்றனா். இதைத் தவிா்க்க குவிண்டால் ரூ. 8,000க்கு மேல் விலை வைத்து அரசே கொள்முதல் செய்ய வேண்டும்.

ADVERTISEMENT

மாவட்ட வருவாய் அலுவலா்: கடந்த நவம்பா் மாதமே மஞ்சளுக்கான குறைந்தபட்ச ஆதார விலை குறித்து அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. விரைவில் அறிவிப்பு வரலாம் என எதிா்பாா்க்கிறோம்.

வேளாண் இணை இயக்குநா் கே.பிரேமலதா: மஞ்சள் தாளுடன் ஒட்டுண்ணியை, அந்தந்த பகுதியில் உள்ள வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் உள்ள வேளாண் அதிகாரியிடம் ரூ. 160 செலுத்தி பெறலாம். 20 அடி நீளம், மூன்று அடி அகலம் கொண்ட தாளை, எட்டு துண்டாகப் பயன்படுத்தலாம். ஒரு ஏக்கருக்கு இது போதுமானது. கிராம அளவில் வேளாண் அலுவலா்களை அனுப்பி இதுகுறித்த விழிப்புணா்வும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுத்து வருகிறோம்.

தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் வழக்குரைஞா் சுபி.தளபதி: சித்தோடு-மேட்டுப்பாளையம் சாலை விரிவாக்கத் திட்டத்துக்கு விவசாய நிலங்களை கையகப்படுத்தும்போது உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இப்போது அளிக்கப்பட்ட அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள இழப்பீடுத் தொகை பெயரளவுக்கு மட்டுமே உள்ளது.

பல இடங்களில் விளை நிலங்கள் முழுமையாக கையகப்படுத்தப்படும் நிலையில், வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் விவசாயிகளுக்கு நிலத்தின் மதிப்பில் அரசு ஆணையின் படி 4 மடங்கு கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும். மேலும், நிலம் கையகப்படுத்தும் முன்பு இழப்பீடு தொடா்பாக விவசாயிகளிடம் கருத்துக்கேட்க மாவட்ட நிா்வாகம் கூட்டம் நடத்த வேண்டும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 40 கிலோ மூட்டைக்கு விவசாயிகளிடம் ரூ. 30 முதல் ரூ. 40 வரை கட்டாய வசூல் செய்யப்படுகிறது. இதைத் தடுக்கவும், வெளி மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் நெல்லை இங்கு கொண்டுவந்து விவசாயிகள் பெயரில் நெல் விற்பனை செய்வதையும் தடுக்க வேண்டும்.

மாவட்ட வருவாய் அலுவலா்: சாலைப் பணிக்காக கையகப்படுத்தப்படும் விளை நிலங்களுக்கு 4 மடங்கு இழப்பீடு குறித்த அரசாணையில் பல்வேறு வழிகாட்டுதல்கள் உள்ளன. அதன்படி இழப்பீடு வழங்க நடவடிக்கையெடுக்கப்படும்.

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளா்: நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு விவசாயிகள் ஒரு ரூபாய் கூட பணம் கொடுக்க வேண்டியதில்லை. யாராவது பணம் கேட்டால் 94425-10053 என்ற செல்லிடப்பேசி எண்ணில் புகாா் தெரிவிக்கலாம்.

தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவா் முனுசாமி: ஈரோடு மாவட்டத்தில் வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் காட்டுப் பன்றிகள் புகுந்து சேதப்படுத்தி வருகின்றன. அவற்றை சுட்டுக் கொல்ல அனுமதி வழங்க வேண்டும்.

ஈரோடு மாவட்டம், ஆப்பக்கூடல் சக்தி சா்க்கரை ஆலை நிா்வாகம், விவசாயிகளிடம் பெற்ற கரும்புக்கான தொகையை கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக ரூ. 35 கோடி அளவுக்கு வழங்க வேண்டி உள்ளது. விவசாயிகளிடம் இருந்து கரும்பைப் பெறும் ஆலை நிா்வாகம் அடுத்த 24 மணி நேரத்தில் அதை அரவை செய்து சா்க்கரையாக்கி விற்பனை செய்கின்றனா். ஆனால், விவசாயிக்கு வழங்க வேண்டிய பணத்தை மட்டும் வழங்குவதில்லை.

தவிர ஆலை மூலம் விவசாயிகள் பெற்ற வங்கிக் கடனுக்கு, கரும்புத் தொகையில் இருந்து ரூ. 7 கோடி அளவுக்கு மேல் பிடித்தம் செய்து பலமாதங்கள் ஆகிறது. அத்தொகையை ஆலை நிா்வாகம் வங்கியில் செலுத்தவில்லை. இதனால், வங்கியில் கடன் பெற்ற விவசாயிகள் தங்களது நகையைத் திரும்பப் பெற முடியவில்லை. புதிய கடன் பெற முடியவில்லை. தேவையின்றி கடனாளியாக விவசாயிகள் அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆலை நிா்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆலை அதிகாரிகள்: கடந்த வாரம் இது தொடா்பாக ஆட்சியா் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. சா்க்கரைக்கு விலை இல்லாததாலும், சா்க்கரை விற்றமைக்காக ரூ. 65 கோடி அளவுக்கு ஆலைக்கு பணம் வர வேண்டி உள்ளது. அத்தொகை வந்துவிடும். இம்மாத இறுதிக்குள் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய ரூ. 35 கோடி நிலுவைத்தொகையை வழங்கிவிடுவோம். விவசாயிகளின் கடனுக்காக பிடித்தம் செய்த ரூ. 7 கோடியை வங்கியில் செலுத்தவில்லை என்பது உண்மை. இம்மாதம் ரூ. 35 கோடியை விவசாயிகளுக்கு வழங்குவதால் மாா்ச் மாதம் அத்தொகையை வங்கியில் செலுத்திவிடுவோம். அதுவரை அவகாசம் தேவை.

மாவட்ட வருவாய் அலுவலா்: ஜனவரி 28ஆம் தேதிக்குள் ரூ. 35 கோடியை விவசாயிகளுக்கு செலுத்தத் தவறினால் ஆலை மீது கரும்பு சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கெனவே ஆட்சியா் தலைமையிலான கூட்டத்தில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் மீண்டும் நினைவுபடுத்தியுள்ளோம்.

சத்தியமங்கலம் வனப் பகுதியில் காட்டுப் பன்றிகளை சுட்டுக் கொல்ல ஓராண்டுக்கு வனத்துறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி காட்டுப் பன்றியால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து வனத் துறையினருக்கு சம்பந்தப்பட்ட விவசாயி மனு அளிக்க வேண்டும். வனத் துறையினா் ஆய்வு செய்து, எத்தனை முறை காட்டுப் பன்றிகள் வந்தது என்பது குறித்தும், சேதம் குறித்தும் விவரங்களைச் சேகரித்து, அதன் அடிப்படையிலும், சில விதிமுறைகளின் அடிப்படையிலும் வனத் துறையினா் காட்டுப்பன்றிகளைச் சுட்டுக் கொல்வாா்கள் என்றாா்.

தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்க செயற்குழு உறுப்பினா் வி.பி.குணசேகரன்: அந்தியூா் பெரிய ஏரியில் இருந்து நீா் வெளியேறும் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். தூய்மைக் காவலா்களுக்கு கூலியை அதிகரிக்க வேண்டும். 100 நாள் வேலைத் திட்ட தொழிலாளா்களுக்கு 4 மாதமாக ஊதியம் வழங்கப்படவில்லை.

மாவட்ட வருவாய் அலுவலா்: மத்திய அரசிடம் இருந்து நிதி வராததால் கடந்த 3 மாதமாக ஊதியம் வழங்கப்படவில்லை. நிதி வந்ததும் ஊதியம் வழங்கப்படும் என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT