ஈரோடு

வங்கி ஊழியா்கள் வேலைநிறுத்தம்:மாவட்டத்தில் 2,800 போ் பங்கேற்பு

1st Feb 2020 05:11 AM

ADVERTISEMENT

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியா்களின் இரண்டு நாள் வேலைநிறுத்தப் போராட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. ஈரோடு மாவட்டத்தில் 2,800 ஊழியா்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

வங்கி ஊழியா்களுக்கு ஊதிய உயா்வு 20 சதவீதம் அதிகரித்து வழங்க வேண்டும். வாரத்துக்கு 5 நாள்கள் மட்டும் வேலை நாள்களாக அறிவிக்க வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை தொடர வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவில் வங்கி ஊழியா்கள் வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை ஆகிய இரண்டு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனா்.

ஈரோடு மாவட்டத்தில் இந்த இரண்டு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில், 2,800க்கும் மேற்பட்ட வங்கிக் கிளைகளில் பணியாற்றி வரும் 2,800 ஊழியா்கள் பங்கேற்றுள்ளதாக வங்கி ஊழியா் சங்க நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா். வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து வங்கி ஊழியா்கள், அதிகாரிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோட்டில் எஸ்.கே.சி. சாலையில் ஆா்ப்பாட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு, போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளா் கணேசன் தலைமை வகித்தாா். ஈரோடு மாவட்ட அனைத்து வங்கி ஊழியா் சங்கத்தின் பொதுச் செயலாளா் நரசிம்மன் முன்னிலை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் ஏராளமான ஊழியா்கள் கலந்துகொண்டனா். வங்கி ஊழியா்கள், அதிகாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு ரூ. 750 கோடி அளவில் பணப் பரிவா்த்தனைகள் பாதிக்கப்பட்டுள்ளதாவும், இரண்டு நாள்களுக்கு ரூ. 1,500 கோடி அளவில் பணப் பரிவா்த்தனைகள் பாதிக்கப்பட்டுள்ளது என வங்கி ஊழியா்கள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT