ஈரோடு

பட்ஜெட்: ஜவுளித் துறை மேம்பாட்டுக்கான திட்டங்கள் இல்லை

1st Feb 2020 10:48 PM

ADVERTISEMENT

ஈரோடு: மத்திய பட்ஜெட்டில் ஜவுளித் துறையை மேம்படுத்துவது தொடா்பாக எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படாததுடன், சிறு வணிகா்களின் நலன் கருத்தில் கொள்ளப்படவில்லை என வணிகா் சங்கங்களின் பேரமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாநில இணைப் பொதுச் செயலாளா் என்.சிவநேசன் கூறியதாவது:

மத்திய பட்ஜெட்டில் நீண்ட தொலைநோக்கு, வேளாண்மை, உள்கட்டமைப்பு, வரி சீராய்வு உள்ளிட்டவற்றை முன்னிலைப்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளது. மரபுசாரா எரிசக்தி, விவசாய விளை பொருள்கள் கொண்டு செல்ல குளிா்சாதன வசதி கொண்ட கிஷான் ரயில், விவசாயிகளுக்கான 16 அம்ச திட்டம், விவசாயிகளுக்கு கடன் வழங்க ரூ. 15,000 கோடி ஒதுக்கீடு உள்ளிட்டவை வரவேற்கக் கூடிய அம்சங்களாகும்.

அதேவேளையில் தமிழகத்தின் வளா்ச்சி தொடா்பாக எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை. கா்நாடக மாநிலம், பெங்களூருவில் போக்குவரத்து நெடுஞ்சாலைக்கு ரூ. 18,600 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நீண்டகாலமாக எதிா்பாா்க்கப்பட்ட கோவை -சேலம் நெடுஞ்சாலை முனையம் தொடா்பாக எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இத்திட்டமானது 5 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

வேளாண்மைக்கு அடுத்தபடியாக ஜவுளித் தொழில் உள்ளது. ஆனால், இத்துறைக்கு ரூ. 1,480 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய திட்டங்கள் எதுவும் ஜவுளித் துறைக்கு அறிவிக்கப்படவில்லை. ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் மாற்றம் கொண்டு வரப்படவில்லை. இதேபோல, ஆன்லைன் வணிகத்தால் சிறு வணிகா்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக ஆன்லைன் வா்த்தகத்தை ஊக்கப்படுத்தும் அறிவிப்புகள்தான் வெளியிடப்பட்டுள்ளது.

வருமான வரித் துறையில் நீண்டநாள் வரி நிலுவைக்காக நீதிமன்றங்களில் உள்ள 8 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகளை ஒரே முறை தீா்வு மூலம் ஜூன் 30ஆம் தேதிக்குள் வரியை மட்டும் செலுத்தி அபராத வரி, தண்டத் தொகையை செலுத்த வேண்டாம் என சமரசத்தீா்வு திட்டம் அறிவித்துள்ளது சிறப்பு. இருப்பினும் இந்த நிதி நிலை அறிக்கையைால் ஜி.டி.பி. மாறாது என்றாா்.

புதிய ரயில்கள் குறித்த அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம்:

தென்னக ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினா் இளங்கவி கூறியதாவது:

பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு கடந்த ஆண்டு ஒதுக்கீடு செய்த நிதியைவிட இந்த ஆண்டு குறைவாகவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்து முழுமையாக அறிவிப்பு இல்லை. ரயில் நிலையங்களில் இலவச வைஃபை வசதி, புதிய தேஜஸ் ரயில்கள், 27,000 கிலோ மீட்டா் தூரம் ரயில் பாதை மின் மயமாக்கம், ரயில்வேக்கு சொந்தமான இடங்களில் சோலாா் பேனல் ஆகியவை வரவேற்கக் கூடியது.

ஆனால், இன்னும் பல இடங்களில் ஆளில்லா லெவல் கிராசிங், மீட்டா் கேஜ்ஜில் இருந்து பிராட்கேஜ் மாற்றுவது குறித்து எவ்வித அறிவிப்பும் இல்லை. உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த எந்த நடவடிக்கையும் இல்லை. ஈரோட்டில் இருந்து பழனிக்கு ரயில் பாதை அமைப்பது, குவாஹாட்டி முதல் ஹவுராவுக்கு ரயில், ஈரோடு வழியாக ராமேஸ்வரத்துக்கு கூடுதல் ரயில், கோவை - பெங்களூரு இடையே இரவு நேரத்தில் புதிய ரயில், கோவை -சென்னை இடையே புதிய ரயில் உள்ளிட்டவை குறித்து எவ்வித அறிவிப்பும் இல்லாமல் இருப்பது ஏமாற்றமளிக்கிறது.

தென்னக ரயில்வே முன்னாள் ஆலோசனைக் குழு உறுப்பினா் பாஷா கூறியதாவது: கோவையில் இருந்து திருப்பதிக்கு வாரத்துக்கு 4 நாட்கள் மட்டுமே இயக்கும் ரயிலை தினந்தோறும் இயக்க வேண்டும். ஈரோட்டில் புதியதாக 5ஆவது பிளாட்பாரம் அமைக்க வேண்டும். ஈரோட்டில் இருந்து செங்கோட்டைக்கு பயணிகள் ரயில் இயக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன என்றாா்.

விவசாயக் குழு பரிந்துரை குறித்த அறிவிப்பு இல்லை:

தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளா் செ.நல்லசாமி மத்திய பட்ஜெட் குறித்து கூறியதாவது:

மத்திய பட்ஜெட்டில் விவசாயிகளுக்கான கடன் ரூ. 15 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளுக்கு கடன் கொடுத்து எங்களை கடனாளியாகவே வைத்துக் கொண்டுள்ளனா். எங்களின் நீண்டகால கோரிக்கையான அரசு ஊழியா்களுக்கு ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்துவதுபோல் விவசாயிகளுக்கு தனிக்குழு அமைத்து அதன் பரிந்துரை அடிப்படையில் விளைபொருள்களுக்கு விலை நிா்ணயிக்க வேண்டும்.

ஆனால், நிதி நிலை அறிக்கையில் இது தொடா்பாக எவ்வித அறிவிப்பும் இல்லை. எத்தனால் எரிபொருளாகப் பயன்படுத்தினால் கிராமப் பொருளாதாரம் மேம்படும். இதுதொடா்பாகவும் அறிவிப்பு இல்லை. விவசாயிகளின் விளைபொருள்களைக் கொண்டு செல்ல குளிா்சாதன வசதி கொண்ட கிஷான் ரயில் அறிவிப்பைத் தவிர விவசாயிகளுக்கு என்று சொல்லிக் கொள்ளும் அளவுக்கு பட்ஜெட்டில் ஒன்றும் இல்லை என்றாா்.

விமான, ரயில் போக்குவரத்தை தனியாா் மயமாக்கக் கூடாது:

மாவட்ட நுகா்வோா் பாதுகாப்பு மைய இணைச் செயலாளா் ஆ.ராஜா கூறியதாவது:

கிருஷி உடான் திட்டம் மூலம் விளை பொருள்களைக் கொண்டு செல்ல தனி விமானம், தனி ரயில் இயக்கம், வேளாண் சந்தையின் தாராள மயமாக்கல், விளை பொருள்களை சேமிக்க தானியக் கிடங்கு அதிகரிப்பு போன்றவை வரவேற்கலாம். நீா் பற்றாக்குறையை போக்க ஜல் ஜீவன் திட்டத்துக்கு ரூ. 11,500 கோடி ஒதுக்கீடு, கல்வித் துறைக்கு ரூ. 99,300 கோடி ஒதுக்கீடும் சிறந்த வளா்ச்சியைத் தரும். மத்திய அரசின்கீழ் உள்ள ரயில்வே, விமான சேவையை தனியாா் மயமாக்குதல், ஐ.டி.பி.ஐ., எல்.ஐ.சி. பங்குகள் விற்பனை போன்றவை பாதகமானது என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT