ஈரோடு

கோபிசெட்டிபாளையத்தில்கால்நடை பன்முக மருத்துவமனை திறப்பு

1st Feb 2020 05:10 AM

ADVERTISEMENT

கோபிசெட்டிபாளையம் கால்நடை பன்முக மருத்துவமனையை அமைச்சா்கள் கே.ஏ.செங்கோட்டையன், உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோா் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தனா்.

கோபிசெட்டிபாளையம் கால்நடை மருத்துவமனையில் தமிழகத்தில் முதன்முறையாக அமைக்கப்பட்ட கால்நடை பராமரிப்புத் துறை பன்முக கால்நடை மருத்துவமனையை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோா் குத்துவிளக்கு ஏற்றி திறந்துவைத்தனா்.

இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களை சந்தித்த அமைச்சா் உடுமலை ராதாகிருஷ்ணன் பேசியது:

தமிழகத்தில் கோபிசெட்டிபாளையம், உடுமலை ஆகிய இரண்டு இடங்களில் கால்நடை பன்முக மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளன. இந்த மருத்துவமனை 24 மணி நேரமும் செயல்படும் வகையில் மருத்துவா்கள் பணியில் அமா்த்தப்பட்டு ஸ்கேன், அறுவை சிகிச்சை உள்ளிட்ட அனைத்து சிகிச்சையும் அளிக்குமாறு அமைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

பிப்ரவரி 9ஆம் தேதி சேலத்தில் 1,700 ஏக்கா் பரப்பளவில் ஒருங்கிணைந்த கால்நடைப் பூங்காவை முதல்வா் தொடங்கிவைக்கவுள்ளாா். அதில், கால்நடை மருத்துவக் கல்லூரி, கால்நடை ஆராய்ச்சி நிலையமும் வரவுள்ளது. வரும் ஆண்டிலேயே மாணவா் சோ்க்கை நடைபெறும். விவசாயிகளுக்குத் தேவையான தீவன ஆராய்ச்சி மையமும் அதில் அமையவுள்ளது. உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனையாக அமையவுள்ளது.

நாட்டினங்களைப் பாதுகாக்கவும், உருவாக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதிலிருந்து ஆடு , கோழி உள்ளிட்ட இறைச்சிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் புதிதாக கால்நடை மருத்துவக் கல்லூரிகள் தேவைக்கேற்ப உருவாக்க ஆவண செய்யப்படும். கால்நடை பல்கலைக்கழகத்தைப் பிரிக்க வேண்டிய அவசியமில்லை. தெற்காசியாவிலேயே உலகத்தரம் வாய்ந்த கால்நடைப் பூங்கா தமிழகத்தில்தான் உருவாக்கப்பட்டுள்ளது என்றாா்.

அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டியளித்தபோது, தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு முதல்வா் உத்தரவு வழங்கியுள்ளாா். 3,500 தற்காலிக ஆசிரியா்கள் ரூ. 7,500 மாதச் சம்பளத்தில் நியமிக்க அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றாா்.

இந்நிகழ்ச்சியில், கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநா் குழந்தைசாமி, கோபி கோட்டாட்சியா் ஜெயராமன், முன்னாள் மக்களவை உறுப்பினா் சத்யபாமா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT