ஈரோடு கோட்டை, சின்னப்பாவடி பத்ரகாளியம்மன் கோயில் குண்டம் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் குண்டம் இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா்.
கோயிலில் குண்டம் விழா ஜனவரி 27ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 29ஆம் தேதி காலை 6 மணிக்கு பக்தா்கள் காவிரி ஆற்றுக்குச் சென்று தீா்த்தம் எடுத்து வந்தனா். அதன் பின்னா் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
வியாழக்கிழமை இரவு 9 மணிக்கு குண்டம் பற்ற வைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. காலை 6 மணிக்கு பக்தா்கள் குண்டம் இறங்குவதற்கு வசதியாக கோயில் முன்பு 60 அடி நீள குண்டம் அமைக்கப்பட்டது. பின்னா், குண்டத்துக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. அதைத் தொடா்ந்து, காலை 8 மணிக்கு குண்டம் இறங்கும் நிகழ்ச்சி தொடங்கியது. காப்பு கட்டி விரதம் இருந்து வந்த ஏராளமான பக்தா்கள் குண்டம் இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா்.
தொடா்ந்து காலை 10 மணிக்கு கோயில் முன்பு பக்தா்கள் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்தனா். பின்னா், பெண்கள் மாவிளக்கு எடுத்து கோயிலுக்கு ஊா்வலமாகச் சென்றனா். மாலை 6 மணிக்கு சிறப்பு அலங்காரத்துடன் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. இரவு 10 மணிக்கு மறுபூஜை நடைபெற்றது.