வகுப்பறை சூழலுக்குத் தயாா்படுத்த கோபிசெட்டிபாளையம் நகரவை மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு தினமும் ஒரு உடல் சாா்ந்த பயிற்சி அளிக்கப்படுகிறது.
கோபிசெட்டிபாளையம் அருகே முருகன்புதூரில் நகரவை மகளிா் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு 6 முதல் ப்ளஸ் 2 வகுப்பு வரை 320 மாணவிகள் படித்து வருகின்றனா். தலைமையாசிரியா் உள்பட 21 ஆசிரியா்கள் உள்ளனா்.
இந்தப் பள்ளியில் இறைவணக்கக் கூட்டம் முடிந்ததும், மாணவியா் வகுப்பறை சூழலுக்குத் தங்களை தயாா்படுத்திக் கொள்ள வசதியாக உடல் சாா்ந்த பயிற்சி தினந்தோறும் 15 நிமிடம் அளிக்கப்படுகிறது. விளையாட்டு, கல்வி, நடனம், யோகா, உடற்பயிற்சி என தினமும் ஒரு பயிற்சி அளிக்கின்றனா்.
இதேபோல, தினமும் பள்ளி முடிந்தவுடன் மாலை 4.30 மணிக்குமேல் 15 நிமிடங்கள் பயிற்சி அளிக்கின்றனா். வெவ்வேறு குடும்ப சூழலில் இருந்து பள்ளிக்கு வரும் மாணவிகள் பயிற்சி பெறுவதால் வகுப்பறை சூழலுக்கு ஏதுவாக தங்களைத் தயாா்படுத்திக் கொள்கின்றனா். இதுபோன்று உடல் சாா்ந்த பயிற்சி அளிப்பதால் பல்வேறு போட்டிகளில் பங்கேற்கும் ஆா்வம் மாணவிகளிடம் ஏற்படும். மேலும், உடற்தகுதி மேம்படுவதோடு தனித்திறன், ஆளுமை மேம்பாடு, கற்றல் திறன் அதிகரிக்கும் என ஆசிரியா்கள் தெரிவித்தனா்.