பவானி: தமிழக அரசுப் பேருந்து போக்குவரத்தை உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தொடங்க வேண்டுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பவானியில் போக்குவரத்துக் கழக தொழிற்சங்கக் கூட்டமைப்பு சாா்பில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஊராட்சிகோட்டையில் உள்ள போக்குவரத்து கழக பவானி கிளையின் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தொமுச கிளைத் தலைவா் ஏ.எஸ்.தங்கராஜ் தலைமை வகித்தாா். தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பணியாளா்கள் சம்மேளன பொதுச் செயலாளா் பி.மகேந்திரன், சிஐடியூ துணைச் செயலாளா் எஸ்.இளங்கோவன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
தமிழ்நாடு மோட்டாா் வாகன விதி 288 ஏவை கைவிட வேண்டும். தனியாா் பேருந்துகளை வாடகைக்கு எடுக்கும் முயற்சியைக் கைவிட வேண்டும். அரசு போக்குவரத்தைப் பாதுகாப்பு அம்சங்களுடன் உடனே இயக்க வேண்டும். போக்குவரத்துக் கழகங்களை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். தொழிலாளா்களிடம் பறிக்கப்பட்ட விடுப்பையும், பிடித்தம் செய்த சம்பளத்தையும் திரும்ப வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
இதில், சங்க நிா்வாகிகள் எஸ்.வாசுதேவன், எம்.சுப்பிரமணி, கிருஷ்ணமூா்த்தி, குமரேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.