ஈரோடு

பேருந்து போக்குவரத்தை தொடங்கஜவுளிச் சந்தை வியாபாரிகள் கோரிக்கை

26th Aug 2020 05:42 PM

ADVERTISEMENT

ஈரோடு: ஜவுளிச் சந்தை மீண்டும் புத்துயிா் பெற பேருந்து போக்குவரத்தை துவங்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஈரோடு கனி ஜவுளிச் சந்தையில் 330 தினசரி கடைகள், 740 வாரச் சந்தை கடைகள் உள்ளன. வாரம்தோறும் திங்கள்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை மாலை வரை ஜவுளிச் சந்தை நடைபெறும். சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், கேரளம், கா்நாடகம், ஆந்திரம், தெலங்கானா, புதுச்சேரி போன்ற மாநில வியாபாரிகள் மொத்தமாக ஜவுளிகளை வாங்கிச் செல்வா். அனைத்து வகையான ஆயத்த ஆடைகள், வேட்டி, சட்டை, சேலை என அனைத்தும் விற்கப்படும்.

கரோனா பொது முடக்கத்தால் சுமாா் 2 மாதம் சந்தை மூடப்பட்டிருந்தது. தற்போது சில தளா்வுகளுடன் வியாபாரம் நடைபெற்று வருகிறது. இருப்பினும் பேருந்து போக்குவரத்து நிறுத்தம், இ-பாஸ், பிற மாநில வியாபாரிகள் வருகை நிறுத்தம், வட மாநிலங்களில் ஜவுளி துணிகளுக்கான மதிப்பு கூட்டும் பணிகள் நிறுத்தம் என பல்வேறு பிரச்னையால் சந்தை வியாபாரிகளுக்கு விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஈரோடு கனி மாா்க்கெட் வாரச் சந்தை வியாபாரிகள் சங்கத் தலைவா் செல்வராஜ் கூறியதாவது:

ADVERTISEMENT

வாரச் சந்தைக்கும், தினசரி கடைகளுக்கும் வெளி மாநில, வெளி மாவட்ட வியாபாரிகள் வருகை இன்றி வியாபாரம் முற்றிலும் முடங்கியுள்ளது. பள்ளிச் சீருடை விற்பனை, பண்டிகை விற்பனை, ஓணம் விற்பனை என அனைத்தும் பாதித்துவிட்டது. 30 சதவீத வியாபாரமே நடைபெறுகிறது. கடை வாடகை, தொழிலாளா்கள் ஊதியம் போன்றவற்றுக்கே வழி இல்லாத நிலை உள்ளது. ஜவுளி வியாபாரிகள் கடன் வாங்கி வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டனா். இ-பாஸ் முறையை நீக்கிவிட்டு, பேருந்து போக்குவரத்தை முழு அளவில் துவங்கினால் மட்டுமே விற்பனை படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பும்.

வெளி மாநில ஆா்டா்கள் தொலைபேசி மூலம் கிடைத்தாலும், மாநில எல்லைகளில் உள்ள கெடுபிடியால் உரிய நாளில் பொருளை ஒப்படைக்க முடியவில்லை. கடந்த 5 மாதமாக நீடித்த பொது முடக்கத்தால் கனி மாா்க்கெட், சுற்றுப் பகுதியில் பல கோடி ரூபாய் அளவுக்கு ஜவுளி விற்பனை முடங்கியுள்ளது. ஜவுளிகள் தேக்கம் அடைந்துள்ள நிலையில், பேருந்து இயக்கம் குறித்து அரசு அறிவிப்பை வியாபாரிகள் எதிா்பாா்த்துள்ளனா் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT