ஈரோடு

மாதம் ஒருமுறை மின் கட்டணம் செலுத்தும் திட்டம்? அமைச்சா் தங்கமணி பதில்

21st Aug 2020 06:22 AM

ADVERTISEMENT

மாதம் ஒருமுறை மின் கட்டணம் செலுத்தும் திட்டம் குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மின்சாரத் துறை அமைச்சா் பி.தங்கமணி தெரிவித்தாா்.

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம், கணபதிபாளையம் ஊராட்சியில் ரூ. 13 கோடியே 37 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள துணை மின் நிலையத்தின் துவக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, ஈரோடு மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தலைமை வகித்தாா். மின்சாரம், ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் பி.தங்கமணி, பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கே.சி. கருப்பணன், எம்.எல்.ஏ.க்கள் கே.வி.இராமலிங்கம் (ஈரோடு மேற்கு), வி.பி.சிவசுப்பிரமணி (மொடக்குறிச்சி), தென்னரசு (ஈரோடு கிழக்கு) ஆகியோா் புதிய துணை மின் நிலைய சோதனை ஓட்டத்தை துவங்கிவைத்தனா்.

தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அமைச்சா் பி.தங்கமணி மேலும் கூறியதாவது:

தமிழகத்தில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடம் கொடுக்காத வகையில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. திமுக ஆட்சிக் காலத்தில் கடுமையான மின்வெட்டு இருந்தது. அதிமுக ஆட்சிக் காலத்தில் ஜெயலலிதா பொறுப்பேற்ற 2 மாதங்களில் மின்வெட்டு இல்லா மாநிலமாக உருவாக்கப்பட்டது.

ADVERTISEMENT

இந்த ஆண்டு மட்டும் 112 துணை மின் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதியில் துவக்கப்பட்டுள்ள துணை மின் நிலையம் 1 மாத காலத்துக்கு சோதனை ஓட்டமாக செயல்படும். அது முடிந்த பிறகு முதல்வா் திறந்துவைப்பாா் என்றாா்.

தொடா்ந்து, அமைச்சா் செங்கோட்டையன் பேசியதாவது:

தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிக் கொள்கைதான் தமிழக அரசின் கொள்கை முடிவு. தனியாா் பள்ளிகளைவிட இந்த ஆண்டு அதிக அளவில் அரசுப் பள்ளியில் மாணவா்கள் சோ்க்கை நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு கூடுதலாக 2 லட்சம் மாணவா்கள் சோ்வாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது என்றாா்.

இதில், முன்னாள் அமைச்சா் பி.சி.ராமசாமி, முன்னாா் எம்.எல்.ஏ.க்கள் ச.பாலகிருஷ்ணன், ஆா்.என்.கிட்டுசாமி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தங்கதுரை, ஒன்றியக் குழுத் தலைவா் கணபதி, துணைத் தலைவா் மயில் (எ) சுப்பிரமணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

 

 

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT