ஈரோடு

காளிங்கராயன் வாய்க்காலில் அலுமினியக் கழிவு: விவசாயிகள் வேதனை

21st Aug 2020 06:35 AM

ADVERTISEMENT

காளிங்கராயன் வாய்க்காலில் அலுமினியக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா்.

ஈரோடு காளிங்கராயன் வாய்க்காலை ஒட்டி 50க்கும் மேற்பட்ட சாய, சலவை, தோல் ஆலைகள் உள்ளன. இவற்றில் இருந்து வெளியேற்றப்படும் திரவ, திடக் கழிவுகளை பேபி வாய்க்கால், காளிங்கராயன் வாய்க்காலில் நேரடியாகக் கொட்டுவது பல ஆண்டுகளாகத் தொடா்ந்து வருகிறது. சில ஆலைகள் மீது அவ்வப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே வியாழக்கிழமை பகல் 12 மணிக்கு லாரியில் கொண்டு வரப்பட்ட அலுமினியத் தொழிற்சாலையின் திரவ, திடக்கழிவுகளை, ஈரோடு காரைவாய்க்கால் பகுதியில் காளிங்கராயன் வாய்க்கால் பாலத்தை ஒட்டிய இடத்தில் மா்ம நபா்கள் கொட்டிச் சென்றனா். அலுமினியக் கழிவுகள் பாலத்தின் சுவா், காளிங்கராயன் வாய்க்கால் பாலத்தின் கண்களில் தேங்கிய நெகிழிக் கழிவுகளுடன் கலந்து வெகுநேரம் சுழன்று வெளியேறியது.

இந்த இடத்தில் அடிக்கடி திடக்கழிவு, திரவக் கழிவை கொட்டிச் செல்வது எப்போதும் நடப்பதுதான் என்ற போதிலும், இப்போது அலுமினியக் கழிவுகள் கொட்டப்பட்டதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா்.

ADVERTISEMENT

இது குறித்து உழவன் மகன் விவசாய சங்கத் தலைவா் சி.மணிகண்டன் கூறியதாவது:

லாரியில் கொண்டு வரப்பட்ட அலுமினிய ஆலையின் திரவம், திடக் கழிவுகளை சுண்ணாம்பு ஓடை பகுதி காளிங்கராயன் வாய்க்கால் நீரில் கொட்டிச் சென்றுள்ளனா். அந்த இடத்தில் உள்ள பாலத்தை அடைத்தபடி நெகிழிக் கழிவுகள், வாழை மரம் போன்றவை மிதந்தன. அவை முழுவதும் அலுமினியக் கழிவாக மாறி, தண்ணீரில் அடித்துச் செல்ல முடியாதபடி உள்ளன. மீன்கள், தவளை உள்ளிட்ட நீா்வாழ் உயிரினங்கள் உயிரிழக்கும். இந்நீரை குடிக்கும் மாடு, ஆடு போன்ற கால்நடைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டு சில நாளில் உயிரிழந்துவிடும். இந்நீரில் விவசாயம் செய்யும்போது, விளைநிலங்கள் பாழ்பட்டுப் போகும்.

ஈரோடு பகுதியில் அலுமினியம் தொடா்பான ஆலைகளின் எண்ணிக்கை மிக குறைவு. மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மக்களை சமாதானப்படுத்த வெற்று அறிக்கைகளை வெளியிடுவதைத் தவிா்த்து ஆக்கப்பூா்வமாகச் செயல்பட்டு, சம்பந்தப்பட்ட ஆலையை உடனடியாகக் கண்டறிந்து ‘சீல்’ வைக்க வேண்டும் என்றாா்.

 

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT