ஈரோட்டில் புதை சாக்கடை திட்டப் பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்தத் தொழிலாளி மண் சரிவில் சிக்கி உயிரிழந்தாா்.
ஈரோடு நேதாஜி சாலை, முனிசிபல்சத்திரம் அருகே மாநகராட்சியின் சாா்பில் புதை சாக்கடை திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக அப்பகுதியில் சுமாா் 15 அடி ஆழத்தில் குழிகள் தோண்டப்பட்டு குழாய் பதிக்கும் பணிகளில் ஒப்பந்தத் தொழிலாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா். இதில், ஒப்பந்தத் தொழிலாளியான லக்காபுரம் பகுதியைச் சோ்ந்த சின்ராசு மகன் ஆனந்த் (24) குழிக்குள் இறங்கி குழாய் பதிக்கும் பணியில் வியாழக்கிழமை காலை ஈடுபட்டிருந்தாா்.
அப்போது அங்கு மண் சரிவு ஏற்பட்டு குழியை முழுவதுமாக மூடியது. மண் சரிவுக்குள் ஆனந்த் சிக்கிக் கொண்டாா். இதைப் பாா்த்த சக தொழிலாளா்கள் மாநகராட்சி அதிகாரிகளுக்கும், தீயணைப்புத் துறைக்கும் தகவல் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து சம்பவ இடத்துக்குச் சென்ற தீயணைப்புத் துறையினா் மண் சரிவில் சிக்கிய ஆனந்தை மீட்கும் பணியில் ஈடுபட்டனா்.
மீட்புப் பணி நடைபெறும் பகுதியில் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு தயாா் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தது. 45 நிமிட போராட்டத்துக்குப் பிறகு ஆனந்த் உடலை தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.
இதையடுத்து, ஈரோடு தெற்கு போலீஸாா் ஆனந்த் உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இச்சம்பவம் தொடா்பாக ஈரோடு தெற்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.