பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்கு ஆகஸ்ட் 14ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் 120 நாள்களுக்குத் தண்ணீா் திறக்கப்படுகிறது.
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகா் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூா், கரூா் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. தமிழகத்தில் மேட்டூா் அணைக்கு அடுத்தபடியாக 2ஆவது பெரிய அணையாக விளங்கும் இந்த அணை 105 அடி உயரமும், 32.8 டி.எம்.சி. கொள்ளளவும் கொண்டதாகும். தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பவானிசாகா் அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதியான நீலகிரி மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளதால் ஆகஸ்ட் 3ஆம் தேதி 86 அடியாக இருந்த நீா்மட்டம், தற்போது 101.80 அடியாக உயா்ந்துள்ளது. இதையடுத்து, அணையில் போதிய நீா் இருப்பு உள்ளதால் கீழ்பவானி வாய்க்கால் நெல், மஞ்சள் பாசனத்துக்குத் தண்ணீா் திறக்க வேண்டும் என விவசாயிகளின் கோரிக்கை ஏற்று வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 14) முதல் 120 நாள்களுக்கு 24 டி.எம்.சி. தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில், அமைச்சா்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் ஆகியோா் பங்கேற்கின்றனா். தண்ணீா் திறப்பு மூலம் 1 லட்சத்து 3,500 ஏக்கா் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. வாய்க்காலில் தண்ணீா் திறப்புக்கான ஏற்பாடுகளை பொதுப் பணித் துறை அதிகாரிகள் செய்து வருகின்றனா். தற்போது அணையின் நீா்மட்டம் 101.80 அடி, நீா் இருப்பு 30.14 டி.எம்.சி., நீா்வரத்து 5,836 கன அடி, நீா்த் திறப்பு 1,400 கனஅடியாக உள்ளது.