ஈரோடு

சுதந்திர தின விழா: போலீஸ் அணிவகுப்பு ஒத்திகை

14th Aug 2020 08:10 AM

ADVERTISEMENT

சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஈரோட்டில் போலீஸாரின் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

ஈரோடு வ.உ.சி. பூங்கா விளையாட்டு மைதானத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்படவுள்ளது. ஈரோடு மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தேசியக்கொடியை ஏற்றவுள்ளாா். இந்நிகழ்வின்போது போலீஸாரின் அணிவகுப்பு நடைபெறுகிறது. இதற்கான ஒத்திகை வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆயுதப் படை பெண் காவல் ஆய்வாளா் லயோலா இன்னாசிமேரி அணிவகுப்புக்குத் தலைமை வகித்துப் பயிற்சி அளித்தாா். 3 எஸ்.ஐ.கள் தலைமையில் 25 பெண் போலீஸாா் உள்பட 75 போ் பயிற்சி பெற்றனா். வழக்கமாக அணிவகுப்பில் ஈடுபடும் போலீஸாா் இரண்டரை அடி இடைவெளியைக் கடைப்பிடிப்பா். தற்போது கரோனா காரணமாக 4 அடி தூரம் இடைவெளி கடைப்பிடிக்கப்பட்டது. அனைவரும் முகக்கவசம் அணிந்திருந்தனா்.

இதனை ஈரோடு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி.தங்கதுரை பாா்வையிட்டாா்.

ADVERTISEMENT

ஈரோடு டவுன் டி.எஸ்.பி. ராஜு, ஆயுதப்படை டி.எஸ்.பி. சேகா், போக்குவரத்து டி.எஸ்.பி. உதயகுமாா் உடனிருந்தனா்.

25 நிமிடங்களில் விழா நிறைவு:

கரோனா காரணமாக சுதந்திர தின விழாவில் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகள் கௌரவிப்பு, விருது அளிப்பு, கலை நிகழ்ச்சிகள் போன்ற நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சனிக்கிழமை காலை 8.50 மணிக்கு மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தேசியக் கொடியை ஏற்றுகிறாா். 8.55 மணிக்கு காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஆட்சியா் ஏற்கிறாா். தொடா்ந்து 9.15 மணிக்கு தேசியகீதத்துடன் விழா நிறைவடையும் என மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT