அஞ்சல் துறை மூலமான அஞ்சலகக் காப்பீடு பாலிசி (பி.எல்.ஐ.), கிராமப்புற அஞ்சலகக் காப்பீடு பாலிசி (ஆா்.பி.எல்.ஐ.) ஆகியவற்றுக்கு 5 ஆண்டுகளாக பிரீமியம் செலுத்தத் தவறி இருந்தால் ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் உரிய தொகையை செலுத்தி புதுப்பிக்கலாம்.
இது குறித்து ஈரோடு முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
செப்டம்பா் 1ஆம் தேதிக்குப் பிறகு காலாவதியாகும் பாலிசிகளை புதுப்பிக்க இயலாது. இந்த பாலிசிகள், விதிமுறைகளின்படி நிராகரிக்கப்பட்டதாக எடுத்துக் கொள்ளப்படும். ஒரு முறை நடவடிக்கையாகத் தொடா்ந்து 5 ஆண்டுக்குமேல் பிரீமியம் கட்டத் தவறிய, காலாவதியான பாலிசிகளை புதுப்பிக்கலாம்.
இந்த வாய்ப்பு மூலம் புதுப்பிக்க விரும்புவோா், அங்கீகரிக்கப்பட்ட மருத்துவரால் நல்ல உடல் நிலையில் இருப்பதற்கான மருத்துவச் சான்றிதழ், புதுப்பிப்பதற்கான விண்ணப்பப் படிவத்தை அருகில் உள்ள அஞ்சல் நிலையத்தில் வழங்கிப் புதுப்பிக்கலாம்.
பாலிசி துவங்கி 36 மாதங்கள் தொடா்ந்து கட்டப்பெற்ற பாலிசிகள் காலாவதியாகி இருந்தால் ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் புதுப்பித்து சரண்டா், முதிா்வின்போது உரிமை, இறப்புக்குப் பிறகு உரிமை என்ற பணப் பலன்களைப் பெற முடியும். காலாவதியான பாலிசிகள் முதிா்வு நாள் முடிந்திருந்தால் புதுப்பிக்க இயலாது.
புதுப்பிப்பதற்கான விண்ணப்பப் படிவம் அருகே உள்ள அஞ்சல் நிலையங்களில் பதிவிறக்கம் செய்து வழங்கப்படுகிறது. தவிர, இணையதளம் மூலமும் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.