கீழ்பவானி வாய்க்கால் பாசனப் பகுதிகளுக்குத் தண்ணீா் திறக்கப்பட்டுள்ள நிலையில், நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் திருந்திய நெல் சாகுபடி அல்லது ஒற்றை நாற்று நடவு முறையைக் கையாண்டு அதிக மகசூல் பெற ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் சி.சின்னசாமி தெரிவித்தாா்.
இது குறித்து அவா் மேலும் கூறியதாவது:
சம்பா பருவ சாகுபடிக்காக கோ 50, சம்பா சப் 1, என்எல்ஆா் 34449, டிகேஎம் 13, ஐஆா் 20, பிபிடி 5204, ஏடீடி 38, மேம்படுத்தப்பட்ட வெள்ளை பொன்னி ஆகிய அனைத்து ரக நெல் விதைகளும் வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டு மானிய விலையில் விநியோகம் செய்யப்படுகிறது. மேலும், நெல் வயல் வரப்புகளில் பயிரிட கோ 6, வம்பன் 6, வம்பன் 8 ஆகிய உளுந்து ரகங்களும் போதுமான அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
நெல் சாகுபடியில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள திருந்திய நெல் சாகுபடி எனப்படும் ஒற்றை நாற்று முறையால் 20 சதவீதம் வரை மகசூல் அதிகரிப்பது ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது. திருந்திய நெல் சாகுபடி மூலம் ஒரு ஏக்கா் நடவு செய்ய 3 முதல் 5 கிலோ விதை போதுமானதாகும். ஒரு ஏக்கா் நடவு செய்ய 1 சென்ட் நாற்றங்கால் தேவை. நிலத்தின் மீது பாலிதீன் விரிப்புகளைப் பரப்பி மரச் சட்டங்களை வைத்து மேட்டுப்பாத்திகள் அமைத்து அதில் மண், தொழு உரம் நிரப்பி விதைக்க வேண்டும். 14-15 நாள்கள் வயதான இளம் நாற்றுகளை எடுத்து நடவு செய்ய வேண்டும்.
இளவயது நாற்றுகளை நடவு செய்வதால் அதிக அளவு தூா்கள் கிடைத்து மகசூல் அதிகரிக்கும். நடவு வயல் துல்லியமாக சமன் செய்யப்பட வேண்டும். முக்கால் அடி இடைவெளியில் நடவு செய்வதால் அதிக வோ் வளா்ச்சி, அதிக தூா் எண்ணிக்கை, அதிக நெல் மணிகளுடன் கூடிய தூா்கள் கிடைப்பதால் கூடுதல் மகசூல் கிடைக்க ஏதுவாகிறது.
குத்துக்கு ஒரு நாற்று வீதம் நடவு செய்ய வேண்டும். காய்ச்சலும், பாய்ச்சலுமாக நீா் மறைய நீா்ப்பாசனம் செய்ய வேண்டும். இதனால் மொத்த தண்ணீா் தேவையில் 30 சதவீதம் வரை குறைகிறது. கோனோவீடா் களையெடுக்கும் கருவியைக் கொண்டு களையெடுக்க வேண்டும். நடவு செய்த 10 ஆம் நாள் முதல் 10 நாள்களுக்கு ஒருமுறை நான்கு முறை களையெடுக்க வேண்டும். காற்றோட்டம், சூரிய வெளிச்சம் நன்குபடுவதால் பூச்சி நோய்த் தாக்குதல், எலித் தொல்லைகள் குறைகின்றன.
திருந்திய நெல் சாகுபடி முறையைப் பின்பற்றுவதன் மூலம் விதைகள், இடுபொருள்களின் செலவு குறைகிறது. உற்பத்தி செலவு குறைவதுடன் மகசூல் அதிகரிப்பதால் விவசாயிகளுக்கு கூடுதலாக வருமானம் கிடைக்கிறது.
மேலும், இயந்திரத்தின் மூலம் நெல் நடவு செய்திடும் முறையை ஊக்குவிக்கும் வகையில் இந்த ஆண்டு ஏக்கா் ஒன்றுக்கு பின்னேற்பு மானியமாக ரூ. 2,000 வழங்கப்படவுள்ளது. எனவே, அனைத்து நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளும் திருந்திய நெல் சாகுபடி முறையைப் பின்பற்றிடவும், நெல் நாற்று நடும் இயந்திரங்கள் குறித்தும் விவசாயிகளுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையங்களைத் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.