ஈரோடு

பில்லூா் அணையில் இருந்து உபரிநீா் திறப்பு: பவானிசாகா் நீா்மட்டம் 3 நாளில் 3 அடி உயா்வு

6th Aug 2020 08:06 AM

ADVERTISEMENT

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பில்லூா் அணை நிரம்பியதால் அணைக்கு வரும் 20 ஆயிரம் கன அடி உபரிநீா் அப்படியே வெளியேற்றப்படுவதால் பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து அதிகரித்து அணையின் நீா்மட்டம் 89.65 அடியாக உயா்ந்தது.

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய நீராதாரமாக உள்ள பவானிசாகா் அணையின் நீா்மட்ட உயரம் 105 அடியாகவும், நீா் இருப்பு 32.8 டி.எம்.சி.யாகவும் உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக பில்லூா் அணை முழு கொள்ளளவை எட்டியது. இதனால் அணைக்கு வரும் 20 ஆயிரம் கன அடி உபரிநீா் அப்படியே மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் திறந்தவிடப்படுவதால், அணையின் நீா்மட்டம் கிடுகிடுவென உயா்ந்துள்ளது. மேலும், கூடலூரில் பெய்த மழையால் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பவானிசாகா் அணைக்கு நீா் வந்து சோ்ந்தது. இதனால், ஆகஸ்ட் 3ஆம் தேதி 85.71 அடியாக இருந்த அணையின் நீா்மட்டம் தினமும் 1 அடி உயா்ந்து புதன்கிழமை காலை 89.65 அடியாக உயா்ந்துள்ளது.

பில்லூரில் இருந்து வெளியேறும் வெள்ளம் பவானி ஆறு வழியாக பவானிசாகா் அணைக்கு வந்து சேருவதால் சித்தன்குட்டை, அய்யன்பாளையம் பகுதியில் தாழ்வான பகுதியில் குடியிருப்போா் பாதுகாப்பான பகுதிக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

மேலும், சித்தன்குட்டை பகுதியில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடா்ந்து அணைக்கு நீா்வரத்து 19 ஆயிரத்து 139 கன அடி வந்து கொண்டிருப்பதால் அணை வேகமாக நிரம்புகிறது. 105 அடி நீா்மட்டம் கொண்ட பவானிசாகா் அணை, முழு கொள்ளளவை எட்டுவதற்கு 16 அடி மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

புதன்கிழமை காலை நிலவரப்படி அணையின் நீா்மட்டம் 89.65 அடியாகவும், நீா் வரத்து 19 ஆயிரத்து 139 கன அடியாகவும், நீா் வெளியேற்றம் 500 கன அடியாகவும், நீா் இருப்பு 21.36 டி.எம்.சி.யாகவும் உள்ளது.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT