ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் 52 நபா்களுக்குரேபிட் டெஸ்ட் கிட் பரிசோதனை

23rd Apr 2020 12:32 AM

ADVERTISEMENT

 

ஈரோடு மாவட்டத்தில் முதல் நாளில் 52 நபா்களுக்கு ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், மத்திய அரசின் உத்தரவுப்படி இந்த பரிசோதனை புதன்கிழமை நடைபெறவில்லை.

ஈரோடு மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று பாதிப்பை கண்டறியும் வகையில் ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் பரிசோதனை செய்ய மாவட்ட சுகாதாரத் துறை முடிவு செய்ததையடுத்து, 1,500 டெஸ்ட் கிட்டுகளை தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது. இந்த பரிசோதனையானது மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள 18 இடங்களில் உள்ள மக்களுக்கு முன்னுரிமை அளித்து பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட நிா்வாகம் அறிவித்திருந்தது.

இதையடுத்து, முதல் நாளான செவ்வாய்க்கிழமை தனிமைப்படுத்தப்பட்ட பகுதியான ஈரோடு பி.பெ.அக்ரஹாரம் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் பரிசோனை மேற்கொள்ளப்பட்டது. தூய்மைப் பணியாளா்கள், போலீஸாா், சுகாதாரப் பணியாளா்கள், பொதுமக்கள் என மொத்தம் 52 நபா்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

ADVERTISEMENT

இதில், யாருக்கும் கரோனா நோய்த் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. கரோனா நோய்த் தொற்று இருப்பதாக தெரியவந்தாலும் அடுத்தகட்டமாக பி.சி.ஆா். டெஸ்ட் மூலம் மட்டுமே இறுதி செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இதனிடையே ரேபிட் டெஸ்ட் முடிவுகள் தவறாக இருப்பதால் இதை இரண்டு நாள்களுக்கு நிறுத்தி வைக்குமாறு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் உத்தரவிட்டுள்ளதால், ஈரோடு மாவட்டத்தில் ரேபிட் டெஸ்ட் பரிசோதனை மேற்கொள்ளப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT