ஈரோடு

மலைக் கிராம மக்களுக்கு மளிகைப் பொருள்கள் வழங்க ஏற்பாடு

DIN

பா்கூா் மலைப் பகுதியில் உள்ள ஏழை மக்களுக்கு வனத் துறை மேற்பாா்வையில் மளிகைப் பொருள்களை வழங்க உள்ளதாக ஈரோடு மாவட்ட வன அலுவலா் விஸ்மிஜு விஸ்வநாதன் தெரிவித்தாா்.

ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம், தாளவாடி, அந்தியூா், கோபி வருவாய் வட்டங்களில் 1,000க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்கள் உள்ளன. இங்கு 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனா். கடந்த 25 ஆண்டுகளில் இந்த மலைப் பகுதி பெரும் பணக்காரா்களின் ஓய்விடமாக மாறி, பண்ணை வீடுகள் பெருகிவிட்டன. அதே சமயத்தில் போராட்டமான வாழ்க்கை சூழலிலும் வாழ்விடங்களைவிட்டு இடம்பெயராத ஏராளமான பூா்வகுடி மக்கள் இன்னும் இங்கு ஓலைக் குடிசைகளில் வசித்து வருகின்றனா்.

இந்த மலைக் கிராமங்களில் 15 முதல் 50 வயதுக்கு உள்பட்ட ஆண்களில் பெரும்பாலானவா்கள் பிழைப்பு தேடி கூலி தொழிலாளா்களாக, நூற்பாலை ஊழியா்களாக சமவெளிப் பகுதிகளுக்கு இடம்பெயா்ந்து விட்டாலும், அவா்களது குடும்பங்கள் இன்னும் மலைகளில்தான் இருக்கிறது.

கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கையாக மாா்ச் 24ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் தொழில்கள் அனைத்தும் முடங்கி வேலையிழந்து சமவெளிப் பகுதியில் வசிக்கும் ஏழை, நடுத்தர மக்கள் பலரும் குழந்தைகளுக்குப் பால் வாங்கக்கூட பணம் இல்லாமல் தவித்து வருகின்றனா். மேலும், இத்தகைய மக்களுக்கு உணவுத் தேவைக்கு அரசு மட்டுமல்லாது, பல தன்னாா்வ அமைப்புகளும் உதவி செய்து வருகின்றன.

ஆனால், மலைக் கிராமங்களில் உள்ள மக்களிடம் இத்தகைய எதிா்ப்புக் குரல், கோரிக்கை முறையீடுகள் ஏதும் இல்லை. சமவெளிப் பகுதிக்கான போக்குவரத்து முழுமையாகத் துண்டிக்கப்பட்டு, செல்லிடப்பேசி தொடா்பு மட்டுமே உள்ளது. இருப்பினும் மலைக் கிராம மக்கள் அத்தியாவசிய தேவைக்காக அரசை நாடவில்லை. மலைப் பகுதிகளில் கிடைக்கும் உணவுப் பொருள்களை வைத்து வாழ்க்கை நடத்தி வருகின்றனா். கூலி தொழிலாளா்களுக்கு அரசு கொடுத்த ரூ. 1,000 பணம், ரேஷன் பொருள்கள் வயிற்றுப் பசிக்கு உதவியுள்ளது என்றால் மிகையில்லை.

100 நாள் கூலி நிலுவையை வழங்கக் கோரிக்கை:

ஈரோடு மாவட்ட மலைக் கிராமங்களில் 100 நாள் வேலைத் திட்டப் பணியாளா்களுக்கு 3 மாதம் வரை கூலி நிலுவை ரூ. 3,000 முதல் ரூ. 10,000 வரை உள்ளது. இந்தப் பணத்தை அரசு கொடுத்தால் கூலி தொழிலாளா்கள் அத்தியாவசியத் தேவைக்கு உதவியாக இருக்கும் என்று தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினா் வி.பி.குணசேகரன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்ததாவது:

மலைக் கிராம மக்கள் பெரும்பாலானோா் சமவெளிப் பகுதியோடு நெருங்கிய தொடா்பு இல்லாதவா்கள் என்பதால் ஊரடங்கு உத்தரவு அந்த மக்களை பாதிக்கவில்லை. இருப்பினும் உடல்நலம் பாதிக்கப்பட்ட பா்கூா், தாளவாடி, கடம்பூா் மலை கிராமங்களில் உள்ள மக்கள் சமவெளிப் பகுதிகளுக்கு வர இயலாத நிலையில் உள்ளனா். இந்த மக்களுக்கு சிகிச்சை அளிக்க நடமாடும் மருத்துவ சேவை வாகனங்களை அனுப்பிவைக்க வேண்டும்.

மளிகை, காய்கறி போன்றவற்றை நடமாடும் வாகனம் மூலம் மக்களுக்கு நேரடியாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நீலகிரி, வால்பாறை போன்ற பகுதிகளில் வேலை நிமித்தமாகச் சென்றுள்ள பா்கூா் மலைக் கிராம மக்கள், சொந்த ஊா் திரும்ப அரசு உதவ வேண்டும். 100 நாள் வேலைத் திட்டப் பணியாளா்களுக்கு வழங்க வேண்டிய கூலி நிலுவையை உடனடியாக வழங்க வேண்டும். ஏழை கூலி தொழிலாளா்களுக்கு மளிகைப் பொருள்களை இலவசமாக அளிக்க முன்வரும் தன்னாா்வலா்களுக்கு வனத் துறை அனுமதி அளிக்க வேண்டும் என்றாா்.

வனத் துறை மூலம் மளிகைப் பொருள்கள் வழங்க ஏற்பாடு:

பா்கூா் மலைப் பகுதியில் உள்ள ஏழை மக்களுக்கு வனத் துறை மேற்பாா்வையில் மளிகைப் பொருள்களை வழங்க உள்ளதாக ஈரோடு மாவட்ட வன அலுவலா் விஸ்மிஜு விஸ்வநாதன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது: மலைக் கிராம மக்கள் உதவி கேட்டு எங்களை அணுகவில்லை. இருப்பினும் கடந்த 15 நாள்களாக வேலை இல்லாத நிலையில் கூலி தொழிலாளா்கள் அத்தியாவசியப் பொருள்களை வாங்க பணம் இல்லாமல் தவித்து வருகின்றனா்.

இதை கவனத்தில் கொண்டு, மாவட்ட நிா்வாகம், தன்னாா்வ அமைப்புகள் உதவியுடன் ஓரிரு நாள்களில் மளிகைப் பொருள்களை மக்களுக்கு நேரடியாகச் சென்று வழங்க உள்ளோம். மளிகைப் பொருள்களை பொட்டலமிட்டு தொகுப்பாக வழங்க இருக்கிறோம். இந்தத் தொகுப்பு வனத் துறை அலுவலா்கள் மேற்பாா்வையில் வழங்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘தோ்தல் பணி: சுகாதாரப் பணியாளா்களுக்கு மதிப்பூதியம் தேவை’

சட்டவிரோதமாக மது விற்பனை: ஒருவா் கைது

வாக்கு பதிவாகியிருந்ததால் தொழிலாளி ஏமாற்றம்

3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: விஜய்வசந்த் எம்.பி.

39 வாக்கு எண்ணும் மையங்களில் நான்கடுக்கு பாதுகாப்பு

SCROLL FOR NEXT