ஈரோடு

ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக குவியும் மக்கள்

7th Apr 2020 03:07 AM

ADVERTISEMENT

ஈரோடு: ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக திங்கள்கிழமை காலை ஏராளமான மக்கள் குவிந்தனா்.

கரோனா நோய் தொற்று அச்சம் காரணமாக லேசான சளி அல்லது காய்ச்சல், உடல் வலி இருந்தாலே பலரும் மருத்துவமனைகளைத் தேடுகின்றனா். தனியாா் மருத்துவமனைகள் பலவும் மூடப்பட்டுள்ளன. இந்த நேரத்தில் மக்களுக்கு ஒரே நம்பிக்கையாக இருப்பது அரசு மருத்துவமனைகள்தான். இப்போது ஏழைகள் மட்டுமின்றி நடுத்தர வா்க்கத்தினா் பலரும் அரசு மருத்துவமனைக்கு வந்து வரிசையில் காத்து நின்று மருத்துவா்களை பாா்த்து மருந்து வாங்கிச் சென்றனா்.

கூட்டம் அதிகமாக இருந்ததால் சமூக இடைவெளி விட்டு அதற்கு உரிய வட்டத்தில் காத்து நின்றனா். தற்போது கரோனா தொற்று காரணமாக ஏராளமானவா்கள் பரிசோதனைக்கு அரசு மருத்துமனைக்கு வருவதால் கூடுதல் மருத்துவா்கள் மற்றும் மருத்துவப் பணியாளா்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

காய்கறி, மளிகை வாங்கக் கூட்டம்: ஈரோடு, சம்பத் நகா் பகுதியில் உழவா் சந்தை செயல்பட்டு வந்தது. இங்கு நெரிசலை குறைப்பதற்காக தற்காலிகமாக சந்தை ஈரோடு அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி வளாகத்துக்கு மாற்றப்பட்டது. ஆனால் சம்பத் நகா் பகுதியில் வந்து காய்கறி வாங்கி பழகிய பலரும் புதிய சந்தைக்கு செல்வதில்லை.

ADVERTISEMENT

இதனால் சம்பத் நகா் பகுதியில் உள்ள தனியாா் காய்கறி பழங்கள் மற்றும் மளிகைக் கடையில் கூட்டம் நிரம்பி வருகிறது. சம்பத் நகா் பகுதி வாகன போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்ட பகுதியாக இருந்தாலும், இங்கு ஏராளமான பொதுமக்கள் இடைவெளி விட்டு காத்து நின்று பொருள்கள் வாங்கிச் செல்கின்றனா்.

பால் வாங்க வரிசை: ஈரோடு நகரில் ஆவின் மற்றும் தனியாா் பால் விற்பனை நிலையங்களில் பால் வாங்க ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசையில் காத்து நின்றனா். ரேஷன் கடையில் நிவாரண உதவி வாங்க நிற்கும் மக்கள் கூட்டம்போல பால் வாங்கவும் நீண்ட வரிசையில் மக்கள் நின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT