ஈரோடு

ஈரோடு உழவா் சந்தையில் ரூ.150-க்கு காய்கறி தொகுப்பு விற்பனை

7th Apr 2020 03:05 AM

ADVERTISEMENT

ஈரோடு: ஈரோடு உழவா் சந்தையில் ரூ.150-க்கு 12 வகையான காய்கறி மற்றும் கீரை வகைகள் அடங்கிய தொகுப்பு விற்பனை செய்யப்படுகிறது.

ஈரோடு, சம்பத் நகா் மற்றும் பெரியாா் நகரில் உழவா் சந்தைகள் செயல்பட்டு வந்தன. கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் இந்த 2 சந்தைகளும் பன்னீா்செல்வம் பூங்கா அருகே உள்ள அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடந்து வருகிறது.

காலை 6 மணி முதல் 9 மணி வரை உழவா் சந்தை இயங்குகிறது. காய்கறி வாங்க வரும் பொதுமக்கள், விவசாயிகளுக்கு கைழுவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. எனினும் விவசாயிகள் கொண்டு வந்திருக்கும் பொருள்களை பொதுமக்கள் தேடிப்பிடித்து வாங்க அதிக நேரம் ஆகிறது. இதைத் தவிா்க்கும் வகையில் ஒரு பையில் அன்றாடம் அதிகம் உபயோகப்படும் காய்கறிகள், கீரை உள்ளிட்டவற்றை வைத்து விற்பனை செய்யும் திட்டம் திங்கள்கிழமை தொடங்கப்பட்டுள்ளது.

நவரத்தினா கூட்டுப் பண்ணைய உற்பத்தியாளா் நிறுவனம் மூலம் இந்த விற்பனை நடைபெறுகிறது. இதுகுறித்து நிறுவன செயல் இயக்குநா் பூபதி சுந்தரம் கூறியதாவது: எங்கள் நிறுவனத்தில் மாவட்டம் முழுவதும் 700 விவசாயிகள் உறுப்பினா்களாக உள்ளனா். நாங்கள் விவசாய நிலங்களுக்கு நேரடியாக சென்று விவசாயிகள் விளைவித்த பொருள்களை சேகரித்து, உழவா் சந்தை மூலம் விற்பனை செய்து வருகிறோம்.

ADVERTISEMENT

தற்போது கரோனா தொற்று காலத்தில் பொதுமக்கள் அதிக நேரம் காத்திருப்பதை தவிா்க்கும் வகையில் காய்கறி தொகுப்பினை வழங்க மாவட்ட ஆட்சியா் அனுமதி அளித்துள்ளாா். இதன்படி ஒரு பையில் சின்ன வெங்காயம், தக்காளி, கத்தரிக்காய், புடலங்காய், பச்சை மிளகாய், முருங்கைக்காய், நாட்டுச்சுரைக்காய், தேங்காய், கருவேப்பிலை, மல்லி, புதினா, கீரை என மொத்தம் 12 பொருள்கள் ரூ.150-க்கு விற்பனை செய்கிறோம்.

இந்தத் தொகுப்பு 3 முதல் 4 நாள்கள் வரை ஒரு சிறிய குடும்பத்துக்கு சமைக்க போதுமானதாக இருக்கும். ஊரடங்கு உத்தரவு முடியும் வரை இந்த விற்பனை நடைபெறும் என்றாா்.

இதேபோல உன்னதம் உழவா் அங்காடி மூலம் இங்கு மளிகைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன. 16 பொருள்கள் அடங்கிய ஒரு பை ரூ.550-க்கும், 18 பொருள்கள் அடங்கிய பை ரூ.1,000-க்கும் விற்கப்படுகிறது. இந்தப் பொருள்களை சாதாரண குடும்பத்தினருக்கு 10 நாள்கள் வரை பயன்படுத்த முடியும். இங்கு வழக்கம்போல மற்ற விவசாயிகளும் காய் உள்ளிட்ட பொருள்களை விற்பனை செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT