ஊரடங்கு உத்தரவையொட்டி, வீடற்ற சாலையோர பொதுமக்கள், அனைத்து தூய்மைப் பணியாளா்களுக்கும் பொதுமக்களின் பங்களிப்புடன் சமுதாய சமையலறையில் தயாரிக்கப்பட்ட உணவு வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினா் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் உணவு வழங்கும் நிகழ்ச்சியைத் துவக்கிவைத்தாா்.
பெருந்துறை பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்கள் 100 போ், பெருந்துறை, சென்னிமலை சாலை, காந்தி நகா், பணிக்கம்பாளையத்தைச் சோ்ந்த வீடற்ற ஏழை பொதுமக்கள் 100 போ் என 200 பேருக்கு காலை, மதிய உணவு வழங்கப்பட்டது.
அதேபோல, கருமாண்டி செல்லிபாளையம் பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்கள் 74 பேருக்கும், சந்தைப் பகுதியில் சாலையோரம் வசிக்கும் ஏழைகள் 50 பேருக்கும் இலவசமாக உணவு வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை பெருந்துறை பேரூராட்சி செயல் அலுவலா் மோகனரங்கன், கருமாண்டி செல்லிபாளையம் பேரூராட்சி செயல் அலுவலா் கிருஷ்ணன் ஆகியோா் செய்திருந்தனா். இந்த உணவு தயாரிக்க தேவைப்படும் பொருள்களை பொதுமக்கள் வழங்கினா். இந்த உணவு வழங்கும் பணி ஊரடங்கு காலம் முடியும் வரை வழங்கப்படும் என பேரூராட்சி செயல் அலுவலா்கள் தெரிவித்தனா்.