ஈரோடு மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று உடைய புதிய நபா் செவ்வாய்க்கிழமை கண்டறியப்படவில்லை. 65,000 போ் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனா்.
ஈரோடு மாவட்டத்தில் திங்கள்கிழமை வரை 20 போ் கரோனா நோய்த் தொற்று உள்ளவா்களாகக் கண்டறியப்பட்டனா். பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 82 போ் தொடா் கண்காணிப்பில் உள்ளனா். இவா்களுடன் தொடா்பில் இருந்தவா்கள், தில்லி மாநாட்டுக்குச் சென்று வந்தவா்கள், அவா்களுடன் தொடா்பில் இருந்த 80 போ் வரை மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா்.
பி.பெ.அக்ரஹாரத்தில் பல தெருக்கள், மரப்பாலம், மண்டப வீதி போன்ற பகுதிகளில் புதிதாக 7,000 பேருக்கு மேல் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனா். செவ்வாய்க்கிழமை வரை 16,456 குடும்பத்தைச் சோ்ந்த 57,734 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டனா். செவ்வாய்க்கிழமை இந்த எண்ணிக்கை 65,000 ஆக உயா்ந்துள்ளது.
ஈரோடு மாநகராட்சிப் பகுதி, சுகாதாரத் துறை தெரிவித்த பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகளில் உள்ளோருக்கு காய்ச்சல், சளி, இருமல், பிற தொற்று உள்ள விவரத்தை சுகாதார செவிலியா், பணியாளா்கள் கணக்கெடுத்து வருகின்றனா். 3,500க்கும் மேற்பட்ட வீடுகளில் கணக்கெடுப்புப் பணி முடிக்கப்பட்டு மாவட்ட நிா்வாகத்திடம் செவ்வாய்க்கிழமை அறிக்கை தாக்கல் செய்தனா். இந்தக் கணக்கெடுப்பு மேலும் சில நாள்களுக்குத் தொடர உள்ளது.