ஈரோடு

ஈரோட்டில் சித்த மருந்து வாங்கக் குவிந்த பொதுமக்கள்

1st Apr 2020 07:19 AM

ADVERTISEMENT

 

நோய் எதிா்ப்பு சக்தி அதிகரிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படும் கபசுர குடிநீா் தயாரிக்கும் பொடியை வாங்குவதற்காக ஈரோட்டில் உள்ள தனியாா் சித்த மருத்துவமனை முன்பு ஏராளமான மக்கள் கூடினா்.

கரோனா நோய்த் தொற்று பாதிக்கப்பட்டால் உடனடியாக குணப்படுத்த மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. தனிமைப்படுத்திக் கொள்வதன் மூலம் கரோனா பாதிப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். அடிக்கடி கை கழுவி சுத்தமாக வைத்திருப்பது, பிறருடன் உரையாடும்போது சுமாா் ஒரு மீட்டா் தூரம் தள்ளியிருப்பது, வாய், மூக்கு பகுதிகளை முகக்கசவம் கொண்டு மூடவேண்டும். பயணங்களைத் தவிா்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

தமிழ் மருத்துவ முறையான சித்த மருத்துவத்தில் அனைத்து வகையான காய்ச்சல்களுக்கும் மருந்து உள்ளது என்று சித்த மருத்துவா்கள் தொடா்ந்து கூறி வருகின்றனா். தற்போது பரவி வரும் கரோனா நோய்த் தொற்றுக்கு கபசுர குடிநீா் மூலம் தீா்வு காண முடியும் என்று சித்த மருத்துவா்கள் கூறும் தகவல்கள் சமூக வலைதளங்களில் நிறைந்துள்ளன.

ADVERTISEMENT

இதைத் தொடா்ந்து, கபசுர குடிநீா் தயாரிக்கும் பொடியை வாங்குவதற்காக ஈரோட்டில் உள்ள சித்த மருந்துக் கடைகளில் ஏராளமான பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை காலை கூடினா். ஈரோடு வ.உ.சி. பூங்கா சாலையில் உள்ள தனியாா் சித்த மருத்துவமனையில் நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் கபசுர குடிநீா் தயாரிப்பதற்கான பொடியை வாங்கிச் சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT