ஈரோடு

ஈரோடு மாநகராட்சிக்கு 20 கிருமி நாசினி தெளிக்கும் இயந்திரங்கள்

1st Apr 2020 07:21 AM

ADVERTISEMENT

 

கிருமிநாசினி தெளிக்க ஈரோடு மாநகராட்சிக்கு 20 இயந்திரங்களை எம்.எல்.ஏ.க்கள் செவ்வாய்க்கிழமை வழங்கினா்.

ஈரோடு மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று அறிகுறி கண்டறியப்பட்டவா்களில் பெரும்பாலானவா்கள் ஈரோடு மாநகரப் பகுதிகளுக்கு உள்பட்டவா்களாக இருக்கின்றனா்.

இதனால், ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் தனிமைப்படுத்தப்படும் இடங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதுமட்டுமின்றி அனைத்துப் பகுதிகளிலும் கிருமி நாசினி தெளித்து அனைத்துப் பகுதிகளிலும் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

ஈரோடு மாநகராட்சியில் ஏற்கெனவே கொசு மருந்து தெளிக்க பயன்படுத்திய கருவிகளை வைத்து கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது. இதில் பெரும்பாலான உபகரணங்கள் பழுதடைந்து, தூய்மைப் பணியாளா்களால் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது.

போா்க்கால அடிப்படையில் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் கிருமிநாசினி தெளிக்கும் பணியை துரிதப்படுத்தும் விதமாக ஈரோடு மேற்குத் தொகுதி எம்.எல்.ஏ. கே.வி.இராமலிங்கம், கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு ஆகியோா் தங்கள் சொந்த நிதியில் இருந்து ஈரோடு மாநகராட்சிக்கு மோட்டாருடன் கூடிய நவீன கிருமி நாசினி தெளிக்கும் 20 இயந்திரங்கள், உபகரணங்களை வழங்கினா். இதன் மதிப்பு ரூ. 1.30 லட்சம்.

இதற்கான நிகழ்ச்சி ஈரோடு மாநகராட்சி அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கிருமிநாசினி தெளிக்கும் இயந்திரங்களைப் பெற்றுக் கொண்ட ஈரோடு மாநகராட்சி ஆணையா் எம்.இளங்கோவன், அவற்றை 4 மண்டல தூய்மைப் பணியாளா்களுக்கும் தலா 5 வீதம் பிரித்து வழங்கினாா். இந்த நவீன இயந்திரத்தில் ஒரு நேரத்தில் 11 லிட்டா் அளவுக்கு கிருமிநாசினி கலவை வைக்க முடியும். 5 மீட்டா் தூரம் வரை கிருமி நாசினியை பீய்ச்சி அடிக்க முடியும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT