ஈரோடு

ஹிந்தியைத் திணிக்க முயன்றால் போராட்டம் நடத்தப்படும்: உதயநிதி ஸ்டாலின்

22nd Sep 2019 05:17 AM

ADVERTISEMENT


 தமிழகத்தில் எந்தக் காலத்திலும் ஹிந்தியைத் திணிக்க முடியாது. அதற்கு முயற்சித்தால் போராட்டம் நடத்தப்படும் என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். 
திமுக இளைஞரணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றதும், தமிழகம் முழுவதும் திமுக இளைஞரணியின் உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தியுள்ளார். இதற்காக ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று உறுப்பினர் சேர்க்கை முகாமைத் தொடங்கிவைத்து வருகிறார். அதன்படி, ஈரோட்டுக்கு சனிக்கிழமை காலை வந்த உதயநிதி ஸ்டாலின், திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாமைத் தொடங்கி வைத்தார்.  முன்னதாக, ஈரோட்டில் உள்ள பெரியார், அண்ணா நினைவகத்துக்குச் சென்ற உதயநிதி ஸ்டாலின் பெரியார், அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 
அப்போது, அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
தமிழகத்தில் எந்தக் காலத்திலும் ஹிந்தியைத் திணிக்க முடியாது. ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. மீண்டும் ஹிந்தியைத் திணிக்க முயற்சித்தால் போராட்டம் நடத்தப்படும். 
விளம்பரப் பதாகை விழுந்து பலியான சுபஸ்ரீயின் வீட்டுக்குச் சென்று ஆறுதல் தெரிவித்தோம். பேனர் வைப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று தலைவர் ஸ்டாலின் 3 ஆண்டுகளாகவே சொல்லி வருகிறார். இளைஞர் அணியில் எந்த நிகழ்ச்சியிலும் பிளக்ஸ் பேனர் வைக்கக் கூடாது என்று சொல்லியிருக்கிறோம். அதைக் கடைப்பிடித்தும் வருகிறோம் என்றார். 
இந்நிகழ்ச்சியில், திமுக மாநில துணைப் பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், ஈரோடு தெற்கு மாவட்டச் செயலாளர் சு.முத்துசாமி, மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT