ஈரோடு சூரம்பட்டி அணைக்கட்டில் இருந்து நன்செய் ஊத்துக்குளி வாய்க்கால் பாசனத்துக்கு சனிக்கிழமை தண்ணீர் திறக்கப்பட்டது.
பெரும்பள்ளம் ஓடையின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சூரம்பட்டி அணைக்கட்டுக்கு கீழ்பவானி கசிவு நீர், மழை நீர் மூலம் தண்ணீர் கிடைத்து வருகிறது. கடந்த 10 நாள்களுக்கு முன் அணைக்கட்டு முழுமையாக நிரம்பி உபரி நீர் வீணாக வெளியேறியது. அணைக்கட்டு முழு கொள்ளளவை எட்டியதால் நன்செய் ஊத்துக்குளி பாசன வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இதன் மூலம் 2,000 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும். இதனால், அப்பகுதி விவசாயிகள் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.
வாய்க்காலில் தூர்வாரும் பணி நடைபெற்று வந்ததாலும், முழுமையாக நிறைவடையாமல் இருந்ததாலும் தண்ணீர் திறக்க முடியவில்லை. தற்போது ஓரளவு பணிகள் நிறைவு பெற்றதால் சூரம்பட்டி அணைக்கட்டில் இருந்து நன்செய் ஊத்துக்குளி பாசனத்துக்கு சனிக்கிழமை காலை தண்ணீர் திறக்கப்பட்டது.
அணையின் கரை உயரம் இப்போதுள்ள அளவில் இருந்து கூடுதலாக 95 செ.மீ. அளவுக்கு உயர்த்தப்பட்டதால் இந்த ஆண்டு வழக்கத்தைவிட வேகமாக தண்ணீர் செல்வதாக பொதுப் பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.