ஈரோடு மாவட்ட சிறு தொழில்கள் சங்கம் (ஈடிசியா) சார்பில் மூன்று நாள்கள் தொழில், நுகர்வோர் கண்காட்சி ஈரோடு இன்டெக் 2019, ஈரோ கனெக்ட் கண்காட்சி சனிக்கிழமை துவங்கியது.
ஈரோடு பெருந்துறை சாலை, பரிமளம் மஹாலில் நடைபறும் இந்தக் கண்காட்சி துவக்க விழா நிகழ்ச்சிக்கு, ஈடிசியா செயலாளர் வி.டி.ஸ்ரீதர், தலைவர் வி.சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கண்காட்சி தலைவர் ஆர்.சுப்பிரமணியன் தலைமை வகித்தார்.
மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் குத்துவிளக்கேற்றி கண்காட்சியைத் துவக்கி வைத்துப் பார்வையிட்டார். இக்கண்காட்சி செப்டம்பர் 23 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தினமும் காலை 10 முதல் இரவு 8 மணி வரை நடைபெற உள்ளது.
இங்கு ஜவுளி, இன்ஜினியரிங், சோலார், ஸ்டீல், பிளாஸ்டிக், பேக்கேஜிங், உணவு, மின் சாதனம், மின் ஊர்தி, கணினி, எலெக்ட்ரானிக்ஸ், ஆர்கானிக், வேளாண் பொருள்கள், தொழில் நுட்பங்கள், நவீன மென்பொருள் செயல்பாடுகள் குறித்த 100 அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கோவை வேளாண் பல்கலைக் கழகம், இந்திய ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பு, மத்திய அரசின் என்.எஸ்.ஐ.சி., எம்.எஸ்.எம்.இ., சிட்பி போன்ற நிறுவனங்கள் அரங்குகள் அமைத்து திட்டங்கள், கடனுதவிகள் குறித்து விளக்கி வருகின்றனர்.
மாநில அரசின் தொழில் மேம்பாட்டு நிறுவனமான இ.டி.ஐ.ஐ., சிட்கோ, தாட்கோ, மாவட்ட தொழில் மையம் போன்றோரும் அரங்குகள் அமைத்துள்ளனர். புதிய தொழில்கள் துவங்குவது தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. தவிர பல்வேறு கல்லுரி மாணவர்களின் தொழில் படைப்பு அரங்கு தனியாக இடம்பெற்றுள்ளது.
சிட்பி துணைப் பொது மேலாளர் எம்.பி.எல்.கான், தென்னக ரயில்வே முதுநிலை கோட்ட வணிக மேலாளர் ஈ.ஹரிகிருஷ்ணன், ஈடிசியா நிர்வாகிகள் வெங்கடேஷ், வெங்கடேஸ்வரன், மில்கா ஒன்டர்கேக் நிர்வாக இயக்குநர் ராம்பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.