ஈரோடு

பேரூராட்சிகளில் 1.89 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டம்

13th Sep 2019 08:04 AM

ADVERTISEMENT

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 42 பேரூராட்சிகளிலும் சேர்த்து 1.89 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மழை குறைவாக உள்ள சூழலில் அதிக எண்ணிக்கையில் மரங்கள் வளரும்போது மழைக்கான வாய்ப்புகள் ஏற்படும் என்ற அடிப்படையில் பல்வேறு அமைப்புகள் சார்பில் மரக்கன்றுகள் நடப்படுகிறது. நடப்பு ஆண்டில் 2 கோடி மரக்கன்றுகள் நடப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்தார். அதன்படி ஈரோடு பேரூராட்சிகளில் 1.89 லட்சம் மரக்கன்றுகள் நடப்படுகிறது.
இதுகுறித்து, ஈரோடு மாவட்ட பேரூராட்சி உதவி இயக்குநர் பெ.கணேஷ்ராம் கூறியதாவது:
மழைக்கான வாய்ப்பை ஏற்படுத்தவும், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தவும் அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்படி பேரூராட்சிப் பகுதியில் உள்ள அனைத்து வீடு, வணிக கட்டடங்கள், தொழிற்சாலைகள், அரசு கட்டடங்களில் மழை நீர் சேகரிப்பு உள்ளதா என்பதை ஆய்வு செய்கிறோம். கடந்த காலங்களில் அமைக்கப்பட்ட மழை நீர் சேகரிப்பு அமைப்பாக இருந்தால் அவை செயல்பாட்டில் உள்ளதா? என்பதை பார்க்கிறோம். அவ்வாறு இல்லாவிட்டால் உடனடியாக அதற்கான முறையில் செயல்படுத்த வலியுறுத்துகிறோம். மழை நீர் சேகரிப்பு அமைப்பு இல்லாத கட்டடங்களில் புதிதாக உடனடியாக ஏற்படுத்த வலியுறுத்தி 100 சதவீதம் ஏற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம்.
இதன் மூலம் நிலத்தடி நீராதாரம் உயரும், மழை நீர் வீணாகாது. மறுபுறம் மரம் நடும் திட்டமும் ஏற்கெனவே செயல்படுத்தப்படுகிறது. தவிர இரண்டு கோடி மரக்கன்றுகள் நட வேண்டும் என்ற முதல்வரின் உத்தரவுப்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள 42 பேரூராட்சி பகுதிகளில் 1.89 லட்சம் மரக்கன்றுகள் நடப்படுகிறது.
பேரூராட்சி பகுதிகளில் உள்ள தெருக்களில் தலா 2,000 மரங்கள், ஏரி, குளம், நீர் வழிப் பாதைகளில் மீதமுள்ள மரங்களை நட ஏற்பாடு செய்துள்ளோம். பேரூராட்சி, பொது அமைப்புகள், பள்ளி உள்ளிட்ட நிறுவனங்கள் மூலம் இவை நடப்படும். தற்போது மழை பெய்து வருவதால் மரக்கன்றுகள் விரைந்து வளரும் என்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT