ஈரோடு

இலவச வேட்டி, சேலைக்கான கூலி உயர்வு குறித்து அரசாணை வெளியிட கோரிக்கை

10th Sep 2019 06:51 AM

ADVERTISEMENT

இலவச வேட்டி, சேலை உற்பத்திக்கு அறிவிக்கப்பட்ட 10 சதவீத கூலி உயர்வுக்கு அரசாணை வெளியிட வேண்டும் என நெசவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
தமிழகம் முழுவதும் உள்ள விசைத்தறி கூட்டுறவுச் சங்கங்கள் மூலமாக இலவச வேட்டி, சேலை தயாரிப்பு பணி நடைபெறுகிறது. ஒவ்வோர் ஆண்டும் சராசரியாக 2.5 கோடி வேட்டி, சேலைக்கு மேல்  தயாரிக்கும் பணியில் நெசவாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதன் மூலம் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட நெசவாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயன்பெறுகின்றனர். இலவச வேட்டி, சேலை உற்பத்திக்கு 2013 ஆம் ஆண்டுக்குப் பிறகு 6 ஆண்டுகளாக கூலி உயர்த்தப்படவில்லை.  
இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தில் 110 விதியின் கீழ் இலவச வேட்டி, சேலை தயாரிக்க 10 சதவீத கூலி உயர்வு அறிவிக்கப்பட்டது.  இதன்படி சேலைக்கு ரூ. 43.10, வேட்டிக்கு ரூ. 24  கூலி கிடைக்கும். 6 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த கூலி உயர்வால் நெசவாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், இதுகுறித்து அரசாணை இதுவரை வெளியிடப்படாததால், கூலி உயர்வு கிடைக்கவில்லை என நெசவாளர்கள் தெரிவித்தனர். 
இதுகுறித்து ஈரோடு மாவட்ட விசைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்களைச் சேர்ந்த நெசவாளர்கள் கூறியதாவது:
இலவச வேட்டி, சேலை தயாரிக்க கடந்த 6 ஆண்டுகளாக கூலி உயர்த்தப்படாமல் உள்ளது. கூலி உயர்த்த வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். அதன்படி  ரூ. 21.60  உள்ள வேட்டிக்கான கூலி ரூ. 36 ஆகவும், ரூ. 39.27 ஆக உள்ள சேலைக்கான கூலி ரூ. 52, விலையில்லாத சீருடைகளுக்கு பிக் ஒன்றுக்கு 15 பைசா உயர்த்தி மீட்டருக்கு ரூ. 12.60 என 50 சதவீத கூலி உயர்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தி வந்தோம். 
ஆனால், பேரவையில் 110 விதியின் கீழ் 10 சதவீத கூலியை உயர்த்தி, சேலைக்கு ரூ. 43.10, வேட்டிக்கு  24 என அறிவிக்கப்பட்டது. இதனால் விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தில் வேட்டி சேலை தயாரிக்கும் நெசாவாளர் கூட்டுறவுச் சங்கங்களுக்கு கூலி உயர்வு எப்போது கிடைக்கும் என கைத்தறி, துணி நூல் அதிகாரிகளிடம் கேட்டோம். 
அரசு அறிவித்த நெசவுக் கூலி உயர்வு தொடர்பான அரசாணை பெறப்படாமல் உள்ளதால் அறிவிக்கப்பட்ட நெசவுக்கூலி உயர்வை தற்போது அனுமதிக்க இயலாத நிலை உள்ளது. விசைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்கள் கடந்த ஆண்டு வழங்கிய நெசவுக் கூலியையே உறுப்பினர்களுக்கு வழங்கலாம். அரசாணை கிடைத்தவுடன் அதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதன் மூலம் வரும் பொங்கல் பண்டிகைக்காக விலையில்லாத வேட்டி, சேலை உற்பத்தி செய்யும் நெசவாளர்களுக்கு கூலி உயர்வு கிடைக்காது எனத் தெரிகிறது. எனவே, கூலி உயர்வு வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT