ஈரோடு

923 பயனாளிகளுக்கு ரூ. 1.55 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

7th Sep 2019 07:00 AM

ADVERTISEMENT

பெருந்துறை ஒன்றியத்தில் பல்வேறு திட்டங்களின்கீழ் 923 பயனாளிகளுக்கு ரூ. 1 கோடியே 55 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. 
விழாவுக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா தலைமை வகித்தார். ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் முன்னிலை வகித்தார். பெருந்துறை வட்டாட்சியர் க. துரைசாமி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினர் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசினார். 
இதில், 304 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டாவும், இந்திரா காந்தி தேசிய  முதியோர் உதவித் தொகை 12 நபர்களுக்கும், இந்திரா காந்தி தேசிய விதவை உதவித் தொகை 24 நபர்களுக்கும், முதல்வர் உழவர் பாதுகாப்புத் திட்டத்தில் கல்வி உதவித் தொகை 15 நபர்களுக்கும், இயற்கை மரணம் ஈமச்சடங்கு உதவித் தொகை 22 நபர்களுக்கும், அம்மா இருசக்கர வாகனம் 131 நபர்களுக்கும், புதிய குடும்ப அட்டை 389 நபர்களுக்கும் வழங்கப்பட்டன. 
இதுதவிர மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை, ஆதரவற்றோர் உதவித் தொகை, பசுமை வீடுகள், பிரதம மந்திரி குடியிருப்பு வீடுகள் உள்ளிட்ட ஏராளமான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதன் மதிப்பு 
ரூ. 1 கோடியே 55 லட்சத்து 27 ஆயிரத்து 224 ஆகும்.
விழாவில், பெருந்துறை வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், வேளாண்மைத் துறை, சமூக நலத் துறை அதிகாரிகள், பயனாளிகள் கலந்துகொண்டனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT