ஈரோடு

சென்னம்பட்டியில் கல் குவாரிகள் அமைக்க எதிர்ப்பு

7th Sep 2019 07:02 AM

ADVERTISEMENT

அந்தியூரை அடுத்த சென்னம்பட்டி பகுதியில் கல் குவாரிகள் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் தங்களது வீடுகளில் கருப்புக் கொடிகளைக் கட்டி போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனர். 
கொமராயனூர் ஊராட்சிக்கு உள்பட்ட கூப்புக்காடு, பெரியார் நகர், மசக்கவுண்டனூர், கொமராயனூர், வடிவேலனூர், தண்ணீர்பள்ளம் சுற்று வட்டாரப் பகுதிகளில் 500 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேற்குத் தொடர்ச்சி மலைக்கு மிக அருகில் உள்ள இப்பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டமும் அதிகம் உள்ளது. 
இந்நிலையில், சென்னம்பட்டி பகுதியில் 4 கல் குவாரிகளுக்கு அனுமதி வழங்கப்படுவதாக பொதுமக்கள் மத்தியில் தகவல் பரவியது. இதனால், அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் கல் குவாரிகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தங்கள் வீடுகளில் கருப்புக் கொடிகளை வியாழக்கிழமை கட்டினர். 
இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது:
விவசாயத்தை நம்பி வாழும் இக்கிராமப் பகுதியில் ஏற்கெனவே உள்ள சில குவாரிகளால் வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. பாறையை உடைக்க வெடி வைக்கும்போது ஆழ்குழாய் கிணற்றிலும் பாதிப்புகள் ஏற்பட்டு மண் மூடிவிடுகிறது. இதனால், விவசாயத் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மேலும் சில குவாரிகளுக்கு அனுமதி வழங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதைத் தடுக்கும் வகையில ஏற்கெனவே புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் கல் குவாரிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கருப்புக் கொடி போராட்டம் நடத்தியதாகக் கூறினர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT