ஈரோடு

விளைச்சல் அதிகரிப்பால் செண்டுமல்லி விலை வீழ்ச்சி

4th Sep 2019 07:11 AM

ADVERTISEMENT

செண்டுமல்லி விளைச்சல் அதிகரிப்பால் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் கிலோ ரூ. 10ஆக சரிந்தது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பவானிசாகர், புஞ்சைபுளியம்பட்டி, சிக்கரசம்பாளையம், புதுவடவள்ளி, கெம்பநாயக்கன்பாளையம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகள் அதிக அளவில் செண்டுமல்லி பயிரிட்டுள்ளனர்.
3 மாத கால பயிரான செண்டுமல்லியில் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறங்களில் உள்ள ரகங்கள் அதிக அளவில் பயிரிடப்படுகின்றன. விவசாயத் தோட்டங்களில் பறிக்கப்படும் பூக்கள் சத்தியமங்கலத்தில் விவசாயிகளால் நடத்தப்பட்டு வரும் பூ மார்க்கெட்டிற்கு கொண்டு வரப்பட்டு ஏல முறையில் பூக்களின் தரத்திற்கேற்ப விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
இங்கு ஏலம் எடுக்கும் பூக்கள் கோவை, திருப்பூர், மதுரை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும், கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் அனுப்பப்படுகின்றன. இந்த நிலையில், ஆவணி, புரட்டாசி மாதங்களில் விசேஷ, பண்டிகை காலம் என்பதால் செண்டுமல்லி பூவிற்கு நல்ல விலை கிடைக்கும் என எதிர்பார்த்து, இப்பகுதியில் அதிக அளவில் செண்டுமல்லி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டிற்கு பூக்கள் வரத்து அதிகரித்ததால் செண்டுமல்லி பூ விலை வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த சில தினங்களாக பூ வரத்து அதிகரிப்பின் காரணமாக கிலோ ரு.10 முதல் ரு.30 வரை மட்டுமே விற்பனையாகிறது. இதன் காரணம் பூக்கள் பறிக்கும் கூலி மற்றும் சாகுபடி செலவிற்கு கூட கட்டுப்படியாகவில்லை என செண்டுமல்லி பயிரிட்டுள்ள விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT