ஈரோடு

விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்: ஈரோட்டில் நாளை போக்குவரத்து மாற்றம்

4th Sep 2019 07:13 AM

ADVERTISEMENT

விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலத்தை ஒட்டி ஈரோட்டில் வரும் வியாழக்கிழமை (செப்.5) போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அன்றைய தினம் வாகன ஓட்டிகள் காவிரி சாலையில் போக்குவரத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
விநாயகர் சதுர்த்தி விழாவை ஒட்டி இந்து முன்னணி மற்றும் பல்வேறு ஹிந்து அமைப்புகள், பொதுமக்கள் சார்பில் மாவட்டம் முழுவதும் 1,400க்கும் மேற்பட்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இதில் மாநகர் முழுவதும் பிரதிஷ்டை செய்யப்பட்ட 200க்கும் மேற்பட்ட சிலைகள் வாகனங்களில் சம்பத் நகருக்கு கொண்டு வரப்பட்டு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு காவிரி ஆற்றில் விசர்ஜனம் செய்யப்படவுள்ளது. 
இந்த ஊர்வலமானது சம்பத் நகரில் இருந்து துவங்கி நசியனூர் சாலை, பெரியவலசு சாலை சந்திப்பு, முனிசிபல் காலனி சாலை, மேட்டூர் சாலை, பிரப் சாலை, காமராஜர் சாலை, ஈஸ்வரன் கோயில் வீதி, மணிக்கூண்டு, கந்தசாமி சாலை, காவிரி சாலை வழியாக காவிரி பாலத்தை சென்றடைகிறது.
விநாயகர் சிலை ஊர்வலம் காரணமாக ஈரோடு மாநகரில் வியாழக்கிழமை (செப்.5) காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.சக்திகணேசன் தெரிவித்தார். 
இதன்படி சேலம், திருச்செங்கோடு, நாமக்கல்லில் இருந்து பள்ளிபாளையம் வழியே ஈரோடு வரும் பேருந்துகள், கனரக வாகனங்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் பள்ளிபாளையம், குமாரபாளையம் வழியாக பவானி சாலை வந்து ஈரோடு பேருந்து நிலையத்தை அடையலாம். அல்லது எஸ்.பி.பி. காலனி, காகித ஆலை, பொன்னி சர்க்கரை ஆலை, வெண்டிபாளையம் பாலம் வழியே சோலார், மூலப்பாளையம்,  காளைமாடு சிலை வந்து பேருந்து நிலையத்தை அடையலாம். 
கோவை, திருப்பூரில் இருந்து பெருந்துறை வழியே ஈரோடு வரும் பேருந்துகள் பெருந்துறை சாலை, வீரப்பம்பாளையம் பிரிவு, காரப்பாறை பிரிவு, வில்லரசம்பட்டி சாலை சந்திப்பு, கனி ராவுத்தர் குளம், சத்தி சாலை வழியே சென்று பேருந்து நிலையத்தை அடையலாம். 
பெருந்துறையில் இருந்து திருச்செங்கோடு மற்றும் நாமக்கல் செல்லும் கனரக வாகனங்கள் பெருந்துறை, நசியனூர், லட்சுமி நகர், குமாரபாளையம், பள்ளிபாளையம் வழியே செல்ல வேண்டும். தாராபுரம், காங்கயம், கொடுமுடி, கரூர், திண்டுக்கல் மார்க்கத்தில் இருந்து ஈரோடு வரும் பேருந்துகள் காளைமாடு சிலை, ரயில் நிலையம் சாலை, ஈ.வி.என். சாலை வழியாகவோ அல்லது பன்னீர்செல்வம் பூங்கா வழியாகவோ அல்லது காவல் துறை அப்போது அனுமதிக்கப்படும் வழித்தடம் வழியாக பேருந்து நிலையம் செல்ல வேண்டும்.
ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து கோவை, திருப்பூர், மேட்டுப்பாளையம் மற்றும் உதகை செல்லும் புறநகர் பேருந்துகள்,  சத்தி சாலை வழியாக சித்தோடு சென்று தேசிய நெடுஞ்சாலை 47 வழியே செல்ல வேண்டும். ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து திண்டல் வழியே பெருந்துறை செல்லும் நகர பேருந்துகள் சத்தி சாலை வழியே கனிராவுத்தர் குளம், வில்லரசம்பட்டி சாலை சந்திப்பு, நசியனூர் சாலை, வீரப்பம்பாளையம் பிரிவு வழியே பெருந்துறை சாலையை அடையலாம். 
ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து திண்டுக்கல், தாராபுரம், கொடுமுடி, கரூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் அனைத்தும் சத்தி சாலை, மஜீத் வீதி, கிருஷ்ணா திரையரங்கு, டவுன் காவல் நிலையம், காந்திஜி சாலை, காளைமாடு சிலை வழியாகவும் அல்லது போலீஸார் அப்போது அனுமதிக்கப்படும் வழித்தடத்தில் பேருந்து நிலையம் செல்ல வேண்டும். 
ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து சங்ககிரி, நாமக்கல், சேலம் செல்லும் பேருந்துகள் பவானி சாலை, லட்சுமி நகர், சேலம் புறவழிச் சாலை வழியே குமாரபாளையம், பள்ளிபாளையம் வழியாக செல்ல வேண்டும்.
இதுதவிர இலகுரக வாகன ஓட்டுநர்கள், விநாயகர் சிலை ஊர்வலம் வரும் வழியை தவிர்த்து மாற்றுப்பாதையில் செல்ல வேண்டும். குறிப்பாக அனைத்து வாகன ஓட்டிகளும் 5 ஆம் தேதி நடக்கும் விநாயகர் ஊர்வலப் பாதை மற்றும் காவிரி சாலையை போக்குவரத்துக்கு தவிர்க்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT