ஈரோடு

மாநகராட்சி முடிவால் வணிகத்தை இழக்கும் கனி ஜவுளிச் சந்தை வியாபாரிகள்

4th Sep 2019 07:09 AM

ADVERTISEMENT

வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்காமல் மாநகராட்சி நிர்வாகம் வணிக வளாகம் கட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதால் வணிகம் முற்றிலுமாக தடைபட்டு சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக கனி ஜவுளிச் சந்தை வியாபாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
பிறந்த குழந்தைக்கு உடுத்தும் மெல்லிய ஆடை முதல் பெரியவர்கள் அணியும் வேட்டி, சேலைகள் வரை அனைத்தும் கிடைக்கக் கூடிய ஈரோட்டின் பிரபல ஜவுளி வியாபார மையமாக உள்ளது கனி மார்க்கெட். 
கொங்கு மண்டலத்தின் மிக முக்கிய வியாபார மையம் இதுதான் என்பதற்கு இந்தியா முழுவதுமிருந்து திரண்டு வரும் வியாபாரிகளே சாட்சி. தென் மாநிலங்களைச் சேர்ந்த சிறு ஜவுளி வியாபாரிகளின் முக்கிய கொள்முதல் தளமாக விளங்குகிறது கனி மார்க்கெட். 
40 ஆண்டுகால பாரம்பரியம்: ஈரோடு மாநகரப் பகுதிகளில் ஆங்காங்கே தங்களின் ஜவுளி ரகங்களை வைத்து வியாபாரம் நடத்தி வந்தனர். தற்போது, மார்க்கெட் உள்ள இந்த இடம்தான் அரசு மருத்துவமனைக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. பின்னர் மருத்துவமனைக்கான இடம் மாற்றப்பட்டது. அப்போது, சில ஜவுளி வியாபாரிகள் ஒன்றிணைந்து அன்றைய நகராட்சித் தலைவர் இ.கே.எம். அப்துல் கனியிடம், இந்த இடத்தில் ஜவுளி வியாபாரிகள் கடை அமைத்து வியாபாரம் நடத்திக்கொள்ள ஏற்பாடு செய்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்களது கோரிக்கையை ஏற்று சுமார் 4 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த இடத்தில் ஜவுளி வியாபாரத்துக்காக மாற்றி வழங்கப்பட்டது. அன்று முதல் இந்த இடம் கடந்த 40 ஆண்டுகளாக தமிழகத்தின் பிரதான ஜவுளிச் சந்தையாக திகழ்ந்து வருகிறது. எனவே இ.கே.எம். அப்துல் கனியின் நினைவாகவே கனி மார்க்கெட் என்று பெயர் சூட்டப்பட்டது.
வெளி மாநிலங்களில் இருந்து வரும் வியாபாரிகள்:  திருப்பூர், கரூர் பகுதிகளில் இருந்து பின்னலாடைகள், குமாரபாளையத்தில் இருந்து லுங்கிகள், பவானியில் இருந்து போர்வை வகைகள், சென்னிமலையில் இருந்து பெட்ஷீட் வகைகள், சேலம் சுற்றுவட்டாரத்தில் இருந்து துண்டுகள், மேலும் குஜராத், மும்பை, கொல்கத்தா, சூரத் உள்ளிட்ட வடமாநிலங்களில் இருந்து வரும் ஜவுளி ரகங்கள் இந்த கனி மார்க்கெட்டில் கிடைக்கும்.
எனவே கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தமிழகத்தின் பிற மாவட்டங்களைச் சேர்ந்த சிறு ஜவுளி   வியாபாரிகள் தங்களுக்குத் தேவையான ஜவுளி ரகங்களை கொள்முதல் செய்ய தேர்ந்தெடுக்கும் முக்கிய இடமாக கனி மார்க்கெட் திகழ்கிறது.
இந்த கனி மார்க்கெட்டில், தினசரி கடைகள் மற்றும் வாரச் சந்தைக் கடைகள் என  இரண்டு வகையான தொழில் நடைமுறைகள் உள்ளன. தினந்தோறும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை தினசரி கடைகள் இயங்கிக் கொண்டிருக்க, வாரம் ஒருமுறை திங்கள்கிழமை மட்டும் வாரச்சந்தை கூடுகிறது. இந்த சந்தை இரவு 9 மணிக்கு மேல் தொடங்குகிறது. செவ்வாய்க்கிழமை மாலை வரை சந்தை நடக்கும். இப்படி வாரம் ஒருநாள் மட்டும் இரவில் கூடும் வாரச் சந்தையில் உற்பத்தியாளர்களே நேரடியாக தங்களின் தயாரிப்புகளை கொண்டுவந்து மொத்த விற்பனையில் ஈடுபடுவர்.  இதனால் கொள்முதல் செய்ய வரும் வெளி மாநில, வெளி மாவட்ட வியாபாரிகள் ஆகியோர் இடைத்தரகர்களின் தொந்தரவு இல்லாமல் குறைந்த 
விலைக்கு ஜவுளி ரகங்களை வாங்கிச் செல்ல முடிகிறது.
வணிக வளாகத்தால் பாதிக்கப்பட்ட வாழ்வாதாரம்: இந்த சந்தை சுமார் 1,000 சிறு ஜவுளி வியாபாரிகளுக்கு கடந்த 40 ஆண்டுகளாக வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. இந்த நிலையில், பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் சந்தையை வணிக வளாகமாக மாற்றிட மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டது.
மொத்தமுள்ள 1.30 லட்சம் சதுர அடி பரப்பளவு உள்ள சந்தை வளாகத்தில் 50,000 சதுர அடியில் வணிக வளாகம் கட்டும் பணி கடந்த மாதம் தொடங்கியது. இதற்காக சந்தையின் ஒரு பகுதியில் கடைகள் அகற்றப்பட்டு பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.
இங்கு கடை வைத்திருந்தவர்களுக்கு மாற்று இடமாக அகில்மேடு வீதியில் உள்ள சின்ன மார்க்கெட் பகுதியில் இடம் ஒதுக்கப்பட்டது. வாரச் சந்தை வியாபாரிகள் சுமார் 750 பேர் உள்ள நிலையில் சின்ன மார்க்கெட்டில் உள்ள காலி இடம் 200 கடைகளுக்கு கூட போதுமானதாக இல்லை. இரண்டு வாரங்கள் மட்டுமே இங்கு வாரச் சந்தை நடத்தப்பட்டது.  இதன் பிறகு கனி ஜவுளிச் சந்தை வளாகத்தில் இடிக்கப்பட்ட பகுதியிலேயே வியாபாரிகள் கடை போட்டனர். அங்கு இடமில்லாதவர்கள் தலைமை அஞ்சல் நிலையம் எதிரில் உள்ள தனியார் சந்தையில் கடை போட்டுள்ளனர். கடைகளை அப்புறப்படுத்திய பிறகு மாநகராட்சி நிர்வாகம் வாரச் சந்தைக்கு என போதுமான அளவுக்கு இடம் ஒதுக்காததால் வியாபாரிகள் பல்வேறு இடங்களுக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், கடந்த ஒரு மாதமாக வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். 
தனியார் சந்தைகளுக்கு சாதகமா?  ஈரோட்டில் மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் கனி ஜவுளிச் சந்தை நடைபெற்று வரும் நிலையில், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஈரோடு சென்ட்ரல் திரையரங்கம் மற்றும் அசோகபுரம் பகுதிகளில் தனியார் ஜவுளிச் சந்தைள் தொடங்கப்பட்டு இங்கும் 1,000க்கும் மேற்பட்ட கடைகள் அமைத்து வியாபாரம் நடந்து வருகிறது. 
இப்போது, வணிக வளாகம் கட்டுமானப் பணியால் கனி ஜவுளிச் சந்தை முடங்கியுள்ள நிலையில், தனியார் சந்தைகளுக்கு வெளியூர் வியாபாரிகளின் வரத்து அதிகரித்துள்ளது என்கின்றனர் கனி ஜவுளிச் சந்தை வியாபாரிகள். மாநகராட்சி நிர்வாகத்தின் செயல்பாடுகள் தனியார் ஜவுளிச் சந்தைக்கு சாதகமான நிலையை ஏற்படுத்தியுள்ளதாக கனி ஜவுளிச் சந்தை வியாபாரிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

வணிக வளாகம்  அவசியம் இல்லை  

இதுகுறித்து ஈரோடு கனி மார்க்கெட் வாரச் சந்தை அனைத்து ஜவுளி வியாபாரிகள் சங்கத் தலைவர் கே.செல்வராஜ் கூறியதாவது:
கனி ஜவுளிச் சந்தையை இடிக்க வேண்டாம் என வியாபாரிகள் தொடர்ந்து வலியுறுத்தினோம். ஆனால், எங்களது கோரிக்கையை மாநகராட்சி ஏற்கவில்லை. கடைகள் இடிக்கப்பட்ட பிறகு வாரச் சந்தை வியாபாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. 
வியாபாரிகள் பலர் கடையை எங்கு வைப்பது என தெரியாமல் பரிதவித்து வருகின்றனர். வெளியூர்களில் இருந்து கொள்முதல் செய்ய வரும் சிறு வியாபாரிகள் ஒன்று, இரண்டு வாரம் பார்த்துவிட்டு நிலைமை சீராகாததால் தனியார் சந்தைகளுக்கு சென்று ஜவுளிகளை வாங்கிச் செல்கின்றனர். இதனால், கடந்த 4 வாரங்களாக வாரச் சந்தையில் ஜவுளி விற்பனை 50 சதவீதத்துக்கும் கீழ் குறைந்துவிட்டது. கட்டுமானப் பணிகள் இன்னும் தொடங்காத நிலையில் இந்த வாரச் சந்தையை வாழ்வாதாரமாகக் கொண்ட சுமார் 750 சிறு வியாபாரிகளின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது. 
வணிக வளாகத்துக்கு 50,000 சதுர அடி எடுத்துக் கொண்டதுபோக மீதமுள்ள 80,000 சதுர அடியில் மற்ற கடைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வாரச் சந்தை நடக்க இடம் ஒதுக்க வேண்டும். தீபாவாளி பண்டிகைக்கான விற்பனை தொடங்கியுள்ள நிலையில், இதற்கான பணிகளை மாநகராட்சி நிர்வாகம் விரைந்து செய்ய வேண்டும் என்றார். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT