ஈரோடு

உரங்களை வெளி மாநிலங்களுக்கு கடத்தினால் நடவடிக்கை: வேளாண் துறை எச்சரிக்கை

4th Sep 2019 07:13 AM

ADVERTISEMENT

அரசு மானியத்தில் வழங்கப்படும் உரங்களை வெளி மாநிலங்களுக்கு கடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண்மைத் துறை இணை இயக்குநர் கே.பிரேமலதா தெரிவித்தார். 
இது குறித்து மேலும் அவர் கூறியதாவது:
விவசாயத்துக்கு பயன்படுத்தப்படும் ரசாயன உரங்களுக்கு மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது. நேரடி விவசாயத்துக்கு மட்டுமின்றி அரசால் அங்கீகரிக்கப்பட்ட கலவை உரங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் மட்டும் மானிய உரங்களை மூலப்பொருள்களாக பயன்படுத்தலாம். இதுதவிர மற்ற பயன்பாடுகளுக்கு பயன்படுத்துவது குற்றமாகும். 
உரிமம் பெற்ற உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் மட்டுமே தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு மாறுதல் செய்ய முடியும். மேலும், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் வேளாண் இயக்குநரகத்திடம் இருந்து மாதம் வாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்ட உரங்கள், பிற மாவட்டத்துக்கு உரிய அனுமதியின்றி அனுப்பக் கூடாது.
அவ்வாறு அனுப்பினால் 7 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும். தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் விற்பனை நிலையங்களில் உர விற்பனையைக் கண்காணிக்க தனிப் படை அமைக்கப்பட்டுள்ளது. 
தற்போது, முக்கிய ரசாயன உரங்களான யூரியா 4,120 டன், டிஏபி 3,140 டன், பொட்டாஷ் 1,296 டன் மற்றும் காம்பளக்ஸ் 4,120 டன் அளவுக்கு மாவட்டம் முழுவதும் இருப்பு வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. கடந்த 5 மாதங்களில் 336 உர மாதிரிகள் எடுக்கப்பட்டு அதில் 15 உர மாதிரிகள் தரமற்றவைகளாக கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும், சம்பா சாகுபடியை கருத்தில் கொண்டு உர விற்பனை மையங்களில் ஒரு வட்டாரத்துக்கு 3 அதிகாரிகள் வீதம் குழு அமைக்கப்பட்டு உர விற்பனை குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. உர விற்பனையாளர்கள் உரிமம் பெறாமல் உரங்கள் விற்பனை செய்வது, உரிமம் இல்லாமல் கிடங்குகளில் இருப்பு வைப்பது, நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்வது, விவசாயிகளுக்கு விற்பனை ரசீது வழங்காமல் இருப்பது, பதிவேடுகள் சரிவர பராமரிக்காமல் இருப்பது உர தரக் கட்டுப்பாட்டு சட்டப்படி தண்டைனைக்குரிய குற்றமாகும். இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுப்பதுடன், விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும். 
மேலும், விவசாயிகள் தங்களது ஆதார் எண்ணை பயன்படுத்தி அனைத்து உர விற்பனை நிலையங்களிலும் விற்பனை முனைய கருவியின் மூலம் மட்டுமே உரங்களை வாங்க வேண்டும் என்றார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT