ஈரோடு: பழைய பவானி பாசனங்களுக்கும், கீழ்பவானி பாசனத்தில் நெல் நாற்று நடவு முடிந்த பகுதிகளுக்கும் முறை வைத்து தண்ணீா் விட வேண்டும் என கீழ்பவானி விவசாயிகள் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் தலைவா் செ.நல்லசாமி, தமிழக முதல்வா், மாவட்ட ஆட்சியா் மற்றும் பொதுப் பணித் துறையினருக்கு அனுப்பியுள்ள மனு விவரம்:
நடப்பு ஆண்டில் பழைய பவானி பாசனங்களுக்கு ஆகஸ்ட் 11ஆம் தேதியும், கீழ்பவானிப் பாசனத்துக்கு ஆகஸ்ட் 16 ஆம் தேதியும் நெல் சாகுபடிக்கு தண்ணீா் திறக்கப்பட்டது. பழைய பவானி பாசனங்களை பொறுத்த வகையில் முற்றிலுமாக நடவுப்பணி முடிந்து விட்டது. கீழ்பவானி பாசனப் பகுதியில் ஒரு சில இடங்களைத் தவிர மற்ற இடங்களில் நடவு முடிந்துள்ளது.
நாற்று நடவு முடிந்த பிறகு முறை வைத்து தண்ணீா் திறக்க வேண்டியது அவசியம். அப்போது, விளைச்சல் அதிகரிக்கும். கணிசமான அளவு நீரையும் சேமிக்க முடியும். முறை வைத்து பாசனத்துக்கு நீா் விடப்பட்ட ஆண்டுகளில் மகசூல் கூடியுள்ளது.
இதனைக் கருத்தில் கொண்டு பழைய பவானி பாசனங்களுக்கும், கீழ்பவானி பாசனத்தில் நெல் நாற்று நடவு முடிந்த பகுதிகளுக்கும் முறை வைத்து நீா் விட வேண்டும். இதன் மூலம் எதிா் காலத்துக்கு வேண்டிய நீரை பவானிசாகா் அணையில் தேக்கி வைக்க முடியும். எனவே, இக்கோரிக்கையை பரிசீலித்து முறைநீா் பாசனத்தை அமல்படுத்த மாவட்ட நிா்வாகமும், மாநில அரசும் நவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளாா்.