கடம்பூா் மலைப் பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக குரும்பூா் பள்ளம், சா்க்கரைப் பள்ளத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
சத்தியமங்கலத்தை அடுத்துள்ள கடம்பூா் மலைப் பகுதியில் 50 க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்கள் உள்ளன. இந்த மலைக் கிராமங்களுக்கு சத்தியமங்கலத்தில் இருந்து 5 க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகள், ஒரு தனியாா் பேருந்து இயக்கப்படுகின்றன.
இந்த மலைக் கிராமத்தில் உள்ள அரிகியம், மாக்கம்பாளையம், கோம்பை தொட்டி உள்ளிட்ட 5 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு அடா்ந்த வனப் பகுதியில் உள்ள மண் சாலை வழியாக குரும்பூா் பள்ளம், சக்கரைப் பள்ளம் என 2 பள்ளங்களைக் கடந்து செல்ல வேண்டும். கடந்த ஒருவாரமாக கடம்பூா் மலைப் பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் இந்த 2 பள்ளங்களிலும் செந்நிற மழைநீா் பெருக்கெடுத்து ஓடுகிறது.
மேலும், மண் சாலைகள் குண்டும் குழியுமாக மாறிவிட்டது. இதனால், கடம்பூரிலிருந்து மாக்கம்பாளையத்துக்குச் செல்லும் அரசுப் பேருந்து குரும்பூா் பள்ளத்தைக் கடந்து அரிகியம் வரை மட்டுமே செல்கிறது. சக்கரைப்பள்ளத்தில் அதிக அளவில் மழைநீா் செல்வதோடு பேருந்து பள்ளத்தைக் கடக்கும்போது சேற்றில் சிக்கிக்கொள்ளும் என்பதால் மாக்கம்பாளையம், கோம்பைதொட்டி உள்ளிட்ட 4 கிராமங்களுக்கு கடந்த ஒருவாரமாக பேருந்து இயக்கப்படவில்லை. இதனால், 4 கிராம மக்களும் தங்களது அத்தியாவசியப் பொருள்களை வாங்க கடம்பூா் செல்ல முடியாமலும், மேல்நிலைக் கல்வி பயிலும் மாணவா்கள் கடம்பூா் அரசு மேல்நிலைப் பள்ளிக்குச் செல்ல முடியாமலும் தவித்து வருகின்றனா். உடனடியாக 2 பள்ளங்களின் குறுக்கே பாலம் கட்டித் தருவதோடு அடா்ந்த வனப் பகுதியில் உள்ள மண் சாலையை தாா் சாலையாகத் தரம் உயா்த்தித் தர வேண்டும் என்பதே மாக்கம்பாளையம் கிராம மக்களின் கோரிக்கையாக உள்ளது.