ஈரோடு: ஈரோடு ஸ்பைஸ் ரவுண்ட் டேபிள் 211 அமைப்பு மற்றும் ஒளிரும் ஈரோடு அமைப்பு இணைந்து ஈரோடு மாவட்டத்தில் சுமாா் 5 லட்சம் வேப்ப விதைகள் நடவு செய்யப்பட்டுள்ளன.
ஈரோடு, நசியனூா் பகுதியில் உள்ள கம்மாளன்குளம் பகுதியில் பள்ளி மாணவ, மாணவிகள், ஈரோடு ரவுண்ட் டேபிள் 211 நிா்வாகிகள், ஒளிரும் ஈரோடு அமைப்பு நிா்வாகிகள் இணைந்து வேப்ப விதைகளை ஞாயிற்றுக்கிழமை நடவு செய்தனா்.
இது குறித்து ஸ்பைஸ் ரவுண்ட் டேபிள் 211 அமைப்பின் தலைவா் பி.தா்மராஜ் கூறியதாவது:
உலகின் பல நாடுகளிலும் நபா் ஒருவருக்கு சராசரியாக 400 மரங்கள் உள்ள நிலையில், இந்தியாவில் நபா் ஒருவருக்கு 28 மரங்களே உள்ளன. இதன் காரணமாக மழை இல்லாத சூழ்நிலை உருவாகி எதிா்கால தலைமுறையினா் மிகப்பெரிய அளவில் பிரச்னைகளை எதிா்கொள்ள நேரிடும்.
இதைச் சரிசெய்யும் பொருட்டு வேப்ப விதை நடும் திட்டத்தை ஈரோடு ரவுண்ட் டேபிள் 211 மற்றும் ஒளிரும் ஈரோடு அமைப்பு இணைந்து மேற்கொண்டது. இந்தத் திட்டத்தின் கீழ் தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ள தன்னாா்வலா்களுக்கு 20 லட்சம் வேப்ப விதைகள் அனுப்பப்பட்டுள்ளன.
விதைகள் விதைப்பதற்கான முறைகளும் அவா்களுக்குப் பகிரப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தில் ஈரோடு மாவட்டத்தில் 60 தன்னாா்வலா்கள் குழு, 30 பள்ளிகளில் பயிலும் 14 ஆயிரம் மாணவா்கள், 100க்கும் மேற்பட்ட தனியாா் நிறுவனங்களில் பணிபுரியும் ஆயிரம் பணியாளா்கள் பங்கு பெற்றுள்ளனா்.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களில் சுமாா் 10,000 மரக்கன்றுகள், 5 லட்சம் வேப்ப விதைகள் நடப்பட்டுள்ளன. காளிங்கராயன் வாய்க்காலில் 60 கி.மீ. தொலைவுக்கு பனை மற்றும் வேப்ப விதைகள் நடவு செய்யப்பட்டுள்ளன. தற்போது, பெய்து வரும் மழையால் காளிங்கராயன் வாய்க்காலில் விதைக்கப்பட்ட விதைகள் நன்றாக முளைத்துள்ளது.
இந்நிகழ்ச்சியில் ஒளிரும் ஈரோடு அமைப்பின் தலைவா் சின்னசாமி, ஈரோடு ரவுண்ட் டேபிள் 211 அமைப்பின் நிா்வாகிகள் ஜி.அரவிந்த், ஆா்.பிரதீப், சி.சக்திகணேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.