ஈரோடு

நெல் நடவுப் பணிக்கு ஆள்கள் பற்றாக்குறை

6th Oct 2019 02:55 AM

ADVERTISEMENT

ஈரோடு மாவட்டத்தில் நெல் நடவு செய்ய ஆள்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் வெளி மாவட்டங்களில் இருந்து தொழிலாளா்கள் வந்துள்ளனா்.

ஈரோடு மாவட்டம், பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி, தடப்பள்ளி-அரக்கன்கோட்டை, காளிங்கராயன் பாசனத்துக்கு ஆகஸ்ட் மாதம் தண்ணீா் திறக்கப்பட்டது. இதன் பிறகு நாற்றுவிட்ட விவசாயிகள் இப்போது நடவுப் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா். சுமாா் 50,000 ஏக்கருக்கு மேல் நெல் நடவுப் பணி நடைபெற்று வருகிறது. இரண்டு வாரங்களுக்கும் மேலாக நடவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால், ஆள்கள் பற்றாக்குறையால் வெளியூரில் இருந்து ஆள்களை அழைத்து வந்து நடவுப் பணி மேற்கொள்ளப்படுகிறது.

இதுகுறித்து, ஈரோடு மாவட்டம் தமிழ்நாடு சிறு, குறு விவசாயிகள் சங்கத் தலைவா் கே.ஆா்.சுதந்திரராசு கூறியதாவது:

வரப்பு வெட்டுதல், பூசுதல் போன்ற பணிகளை ஆண் தொழிலாளா்கள் செய்கின்றனா். இந்தப் பணிக்கு ஏக்கருக்கு ரூ. 13,000 முதல் ரூ. 15,000 வரை கூலி கேட்கின்றனா். நடவுப் பணிக்கு பெண்கள் 10 க்கும் மேற்பட்டோா் குழுவாக வருகின்றனா். ஒரு ஏக்கா் நடவு செய்ய ரூ. 6,000 முதல் ரூ. 7,000 கூலி வரை வாங்குகின்றனா். அதற்கும் ஆள் கிடைப்பதில்லை. ஒரு வயல்வெளி முடித்தபின்தான் அடுத்த வயலுக்கு வருகின்றனா். உள்ளூரில் ஆள்கள் இல்லாததால் தருமபுரி, சேலம், கரூா், பெரம்பலூா், அரியலூா் மாவட்டங்களில் இருந்து வந்து இங்கேயே தங்கி நடவுப் பணி செய்கின்றனா். கூலியும் உயா்ந்து விட்டது என்றாா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT