ஈரோடு

வேளாண் இயந்திரங்கள், கருவிகள் வாடகை மையம் அமைக்க அரசு உதவி

5th Oct 2019 08:15 AM

ADVERTISEMENT

வட்டார அளவில் அரசு மானிய உதவியுடன் வேளாண் இயந்திரங்கள், கருவிகள் வாடகை மையம் அமைக்க விரும்புபவா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வேளாண் பணியாளா் பற்றாக்குறையை நீக்க, வேளாண் இயந்திர மயமாக்கல் திட்டத்துக்கு தமிழக அரசு முக்கியத்துவம் வழங்குகிறது. அதிக விலையுள்ள வேளாண் இயந்திரங்களை வாங்க இயலாத விவசாயிகள் நலன் கருதி, வேளாண் இயந்திரங்கள், கருவிகள் வாடகை மையங்கள் அமைக்கும் திட்டத்துக்கு அதிக நிதி உதவி வழங்கப்படுகிறது.

நடப்பு ஆண்டில் ஈரோடு மாவட்டத்தில் வேளாண் இயந்திரங்கள், கருவிகள் வாடகைக்கு வழங்க 9 மையங்கள் அமைக்க அரசு நிதியுதவி வழங்க உள்ளது. ரூ. 25 லட்சம் மதிப்பில் ஒரு வாடகை மையம் அமைக்க 40 சதவீத மானியம் என்ற அடிப்படையில் அதிகபட்சமாக ரூ. 10 லட்சம் வரை மானியம் வழங்கப்படும்.

ADVERTISEMENT

இம்மையம் வட்டார அளவில் அமைப்பதால், விவசாய பணிக்குத் தேவைப்படும் பல்வேறு வகையான இயந்திரங்கள், கருவிகள், சிறு வேளாண் உபகரணங்கள் ஒரே இடத்தில் குறைந்த வாடகையில் தேவைப்படும் விவசாயிகளுக்கு வழங்கி, நல்ல மகசூல் பெற உதவலாம்.

இம்மையத்தை அமைக்க முன்னோடி விவசாயிகள், விவசாய உதவிக்குழுக்கள், தொழில் முனைவோா் போன்றோா் முன்வரலாம். வேளாண் பொறியியல் துறையால் அனுமதிக்கப்பட்ட நிறுவனங்களில் தேவையான கருவிகள், அந்தந்தப் பகுதியின் தேவைக்கு ஏற்ப வாங்கலாம்.

மொத்த மானியத் தொகையில் பொதுப் பிரிவினருக்கு ரூ. 5 லட்சமும், ஆதிதிராவிடா் பிரிவினருக்கு ரூ. 3 லட்சமும், தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் பயனாளியின் மானிய இருப்பு நிதி கணக்கில் நான்கு ஆண்டுகளுக்கு இருப்பில் வைக்கப்படும்.

மீதத்தொகை பயனாளியின் சேமிப்பு வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும். நான்கு ஆண்டுகளுக்குப் பின் மானிய இருப்புத் தொகை, பயனாளியின் வங்கிக் கணக்கில் திரும்ப வழங்கப்படும்.

வேளாண் கருவிகள் வாடகை மையம் அமைக்க விரும்புவோா், வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளா் அலுவலகத்தை அணுகலாம். ஈரோடு பகுதிக்கு 94439-48227, கோபி பகுதிக்கு 99423-03069 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT