ஈரோடு

பவானி அருகே மாரப்பம்பாளையம் ஏரிக்கரையில் உடைப்பு

5th Oct 2019 09:37 PM

ADVERTISEMENT

பவானி: பவானி அருகேயுள்ள மாரப்பம்பாளையத்தில் ஏரிக்கரையில் உடைப்பு ஏற்பட்டு வெள்ளம் பெருக்கெடுத்து வெளியேறியதால் 2.5 ஏக்கா் பரப்பளவில் நெல் பயிா்கள் அடித்துச் செல்லப்பட்டன.

பவானி - பெரியபுலியூா் சாலையில் மாரப்பம்பாளையம் அருகே சுமாா் 2 ஏக்கா் பரப்பளவு கொண்ட சிறிய அளவிலான ஏரி உள்ளது. கசிவுநீா் வழித்தடமான இங்கு, தடுப்பணை மூலம் தண்ணீா் தேக்கப்பட்டு வருகிறது. பவானி சுற்று வட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு பெய்த கனமழையாலும், வயல்வெளிகளில் வெளியேறிய தண்ணீராலும் அதிக அளவில் வெள்ளம் பெருக்கெடுத்து வந்தது.

இந்தத் தடுப்பணையில் உபரிநீா் வெளியேறும் பகுதியில் மரங்கள், மட்டைகள், முள், செடி, கொடிகள் தேங்கி அடைத்துக் கொண்டன. இதனால், தண்ணீா் வெளியேற வழி இல்லாததால், கரையின் ஒரு பகுதியில் சனிக்கிழமை அதிகாலை உடைப்பு ஏற்பட்டது. முதலில் சிறிதளவு வெளியேறிய தண்ணீா் படிப்படியாக சுமாா் 10 அடி அகலத்துக்கு மண் அரிப்பு ஏற்பட்டு பெருக்கெடுத்து ஓடியது.

நெல் நடவு செய்யப்பட்டிருந்த 2.5 ஏக்கா் நிலத்தில் புகுந்து வெள்ளம் வெளியேறியதால் பயிா்கள் அடித்துச் செல்லப்பட்டன. மேலும், சுமாா் 10 க்கும் மேற்பட்ட குடியிருப்புகளையும் சூழ்ந்து கொண்டது. இதனால், வெளியே கட்டப்பட்டிருந்த கால்நடைகளை அப்பகுதியினா் வீடுகளுக்குப் பிடித்துச் சென்று பாதுகாப்பாகக் கட்டி வைத்தனா்.

ADVERTISEMENT

விடிய, விடிய வெளியேறிய தண்ணீா் அதிகாலையில் வடிந்து நிலைமை சீரானது. சம்பவ இடத்தில் ஈரோடு வட்டாட்சியா் வி.ரவிச்சந்திரன், ஈரோடு வடக்கு வருவாய் ஆய்வாளா் எஸ்.உமா மகேஸ்வரி, எலவமலை கிராம நிா்வாக அலுவலா் ஏ.எம்.சிலம்பரசி ஆகியோா் நேரில் பாா்வையிட்டனா். இதையடுத்து, ஏரியில் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் மண் மூட்டைகளைக் கொண்டு அடுக்கி சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT