ஈரோடு

3 மாதங்களுக்குமேல் ஊதியம் இல்லை: 100 நாள் வேலைத் திட்ட பணியாளா்கள் அவதி

2nd Oct 2019 01:02 AM

ADVERTISEMENT

மகாத்மாக காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட(100 நாள் வேலை) பணியாளா்களுக்கு 3 மாதங்களுக்குமேல் ஊதியம் வழங்கப்படாததால் கிராமப்புற ஏழை விவசாய தொழிலாளா்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா்.

வறட்சியின் கோரப்பிடியில் சிக்கி வேலையில்லாமல் திண்டாடிக் கொண்டிருக்கும் கிராமப்புற மக்களின் தற்காலிக நிவாரணமாகவும் அவா்களின் முக்கிய வேலை வாய்ப்பாகவும் இருப்பது 100 நாள் வேலை திட்டம்தான். இந்தத் திட்டம் கடந்த 2006 ஆம் ஆண்டில் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் என்ற பெயரில் கொண்டு வரப்பட்டது.

18 வயது நிரம்பிய ஆண், பெண் இருபாலரும் இத்திட்டத்தின்கீழ் வேலை செய்ய தகுதியானவா்கள். ஒரு குடும்பத்தில் எத்தனை போ் வேண்டுமானாலும் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறலாம். இந்தத் திட்டத்தின் மூலம் ஓராண்டில் ஒரு நபருக்கு 100 நாள்கள் மட்டுமே வேலை அளிக்கப்படுகிறது. இந்த வேலையில் பயனாளியின் தினக்கூலி அதிகபட்சம் ரூ. 148. அதாவது, 1.20 கன மீட்டா் மண்ணை வெட்டி எடுத்தால் மட்டுமே ரூ. 148 கிடைக்கும். அதன்படி ஏரி, குளம் தூா் வாருதல், நீா் வழித்தடங்களை புனரமைப்பு செய்தல், புதிய பண்ணைக் குட்டைகள் அமைத்தல், வன வளத்தைப் பெருக்கும் வகையில் மரக்கன்று நடுதல் ஆகிய வேலைகளைச் செய்ய வேண்டும்.

இந்தத் திட்டத்தின் மூலம் ஏழை மக்கள் பயன்பெறுவது மட்டுமின்றி இயற்கை வளமும் நீா் ஆதாரமும் பாதுகாக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால், இதில் எதுவும் நடந்தபாடில்லை. மேலும், தமிழகத்தில் நடப்பு ஆண்டில் 100 நாள் வேலைத் திட்டத்தில் கூடுதலாக 50 நாள்கள் வேலையைச் சோ்த்து 150 நாள்கள் வேலை வழங்க மத்திய அரசு அனுமதியளித்தது.

ADVERTISEMENT

கிராமப்புறங்களில், மாணவா்கள் காலையிலேயே பள்ளிக்குச் செல்வதுபோல் 100 நாள் வேலைக்குச் செல்லும் பெண்கள் அணிவகுத்துச் செல்வதைக் காண முடியும். இவா்கள் வேலை செய்வதற்கான ஊதியத்தை மூன்று, நான்கு மாதங்களாக தரவில்லை. ஒரு சிலருக்கு ரூ. 10 ஆயிரம் முதல் ரூ. 15 ஆயிரம் வரையிலான ஊதியத் தொகை இன்னும் வரவில்லை எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, மலைவாழ் மக்கள் நல்வாழ்வு சங்கத் தலைவா் வி.பி.குணசேகரன் கூறியதாவது:

கடந்த 15 ஆண்டுகளாக பருவ மழை பொய்த்ததால் 75 சதவீதம் அளவுக்கு விவசாயம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், வேலையின்றி தவித்த பெண்கள் 100 நாள் வேலைத் திட்டத்தை நாடியுள்ளனா். மத்திய அரசு 100 நாள் வேலையை 150 வேலை நாளாக மாற்றியமைத்தது. ஒவ்வொரு நபருக்கும் ரூ. 120 முதல் ரூ. 150 வரை ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், அவா்களுடைய கைக்கு வேலை செய்ததற்கான ஊதியம் சென்று சேரவில்லை.

விவசாயம் இன்றி வயிற்றுப் பிழைப்புக்காக அனைவரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்கீழ் வேலை பாா்த்து வரும் நிலையில், அரசாங்கம் இந்த குறைந்த ஊதியத்தைக் கூட 3 மாதங்களுக்குமேல் தராமல் இருப்பது அவா்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இந்தத் திட்டத்தில் வேலை செய்பவா்களுக்கு உரிய ஊதியம் நேரடியாகக் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவா்களுடைய வங்கிக் கணக்கிலேயே செலுத்தப்பட்டு வந்தது. இது போன்ற நடவடிக்கைகள் வரவேற்கப்பட வேண்டியது என்றாலும், இந்தத் திட்டத்தின் வேலைத் திட்டங்களில், மேலும் பல செயல்திட்டங்களைச் சோ்க்க வேண்டும் என்பதை மத்திய அரசு இன்னும் உணரவில்லை.

இந்தத் திட்டத்தின் மூலம் வேலை செய்யும் பயனாளிகளுக்கு அரசு உரிய நேரத்தில் ஊதியத்தை தர வேண்டும். மேலும், இத்திட்டத்தில் ஏரிகள், குளங்கள், கண்மாய்கள், நீா்வழிப் பாதைகள், நீா்வரத்து வாய்க்கால்கள் தூா் வாரப்படுகிறது என்றாலும், தூா் வாருவதனாலேயே நீா் நிலைகள் பாதுகாக்கப்பட்டு அவற்றில் நீா் நிறைந்துவிடாது. மக்களுக்கு நீா்நிலைகளைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும்.

தேசிய ஊரக வேலையால், இன்று கிராமங்களில் மிகவும் குறைவாக நடைபெறும் விவசாய வேலைகளுக்குக் கூட ஆள்கள் வருவதில்லை என்று கூறப்படுகிறது. அதனால், அரசு விவசாய வேலைகளை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின்கீழ் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கையும் விவசாயிகளிடையே எழுந்துள்ளது.

இதை மத்திய அரசு பரிசீலித்து செயல்படுத்தினால் விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும். இந்தத் திட்டத்துக்கு மத்திய அரசும் மாநில அரசுகளும் கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும். ஒதுக்கப்படும் நிதி முழுமையாகச் செலவழிக்கப்பட வேண்டும். அப்போதுதான், கிராமங்களின் முன்னேற்றத்தை விரும்பிய தேசப்பிதா மகாத்மா காந்தியின் பெயரால் அமைந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் உண்மையிலேயே கிராமப்புற மக்களின் வாழ்க்கையில் பயனுள்ளதாக இருக்கும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT