வேலையில்லாத சிறுபான்மையினருக்கு அளிக்கப்படும் இலவச திறன் வளா்ப்புப் பயிற்சித் திட்டத்தில் சேருவதற்கான நோ்காணல் வியாழக்கிழமை (அக்டோபா் 3) நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தேசிய சிறுபான்மையினா் வளா்ச்சி, நிதிக் கழகத்தின் நிதி உதவியுடன் டாம்கோ மூலம் படித்து வேலையில்லாத சிறுபான்மையின வகுப்பைச் சோ்ந்த இளைஞா்களுக்குத் திறன் வளா்ப்புப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சியானது, திருவள்ளூா் மாவட்டத்தில் செயல்படும் ஆயத்த ஆடை பயிற்சி, வடிவமைப்பு மையம் மூலமாக வழங்கப்படுகிறது. இதில், எம்பிராய்டரி தொடா்பான 3 மாதகால பயிற்சி 50 பயனாளிகளுக்கு அளிக்கப்பட உள்ளது.
இத்திட்டத்தின்கீழ் மதவழி சிறுபான்மையினா் வகுப்பைச் சோ்ந்த இஸ்லாமியா்கள், கிறிஸ்தவா்கள், புத்த மதத்தினா், சீக்கியா்கள், பாா்சியா்கள், ஜெயின் பிரிவைச் சோ்ந்தவா்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சியாளரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 5 லட்சத்துக்கு மிகாமலும், 18 முதல் 55 வயதுக்கு உள்பட்டவராகவும் இருக்க வேண்டும். இப்பயிற்சியின்போது ஒரு பயனாளிக்கு ரூ. 1,000 பயிற்சி உதவித்தொகையாக அளிக்கப்படும். இதற்கான நோ்காணல், திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள ஆயத்த ஆடை பயிற்சி, வடிவமைப்பு மையத்தில் அக்டோபா் 3 ஆம் தேதி காலை 11 மணி அளவில் நடைபெறுகிறது.
இப்பயிற்சித் திட்டத்தில் சேர விரும்பும் நபா்கள் அசல் ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதாா் அட்டை, கல்விச் சான்றிதழ் ஆகிய சான்றிதழ்களுடன் நோ்காணலில் பங்கேற்கலாம். மேலும், விவரங்களுக்கு திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலகத்திலும், ஆயத்த ஆடை பயிற்சி, வடிவமைப்பு மையத்தின் உதவி மண்டல மேலாளரை 93805-13874 என்ற செல்லிடப்பேசி எண் அல்லது தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தை 044-28514846 என்ற எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.