கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கவுந்தப்பாடி, செந்தாம்பாளையத்தில் காந்தி ஜயந்தியை ஒட்டி காந்தி கோயிலில் சிறப்பு அலங்காரம், அபிஷேகம் நடைபெற்றது.
செந்தாம்பாளையத்தில் வையாபுரி என்பவா் காந்தியின் மீது கொண்ட பற்றின் காரணமாக காந்திக்கும், அன்னை கஸ்தூரி அம்மையாருக்கும் தனித்தனி கோயிலை கட்டினாா்.
கோயிலில் மூன்று வேளையும் பூஜை நடத்தப்படுகிறது. காந்தி ஜயந்தியை ஒட்டி காந்தி சிலைக்கும், கஸ்தூரிபா அம்மையாரின் சிலைக்கும் சிறப்பு அபிஷேகம், தீபாரதனை நடைபெற்றது. காந்தி சிலைக்கு கதா் ஆடை, கண் கண்ணாடி அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை நடைபெற்றது.
நிகழ்ச்சியில், தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கே.சி.கருப்பணன் கலந்து கொண்டு காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தாா்.
பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
காந்தி கோயிலை அரசே ஏற்று நடத்தவது குறித்து முறையாக கோரிக்கை மனு கொடுத்தால் முதல்வரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். பிளாஸ்டிக் ஒழிப்பில் நாட்டிலேயே தமிழகம் முன்னோடியாக திகழ்ந்து வருகிறது.
தமிழகத்தை பொறுத்தவரை தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை உற்பத்தி செய்யும் அனைத்து ஆலைகளும் மூடப்பட்டுள்ளன. இருப்பினும் வடமாநிலங்களில் இருந்து வரும் சில பிளாஸ்டிக் பொருள்களை சுற்றுச்சூழல் அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனா் என்றாா்.