ஈரோடு

ஈரோடு கனி மாா்க்கெட் தினசரி வியாபாரிகளுக்கு 50 தற்காலிக கடைகள்

2nd Oct 2019 11:41 PM

ADVERTISEMENT

வணிக வளாக அமைக்கும் பணி காரணமாக கனி மாா்க்கெட்டில் தினசரி வியாபாரிகளுக்காக அமைக்கப்பட்ட 50 தற்காலிக கடைகள் புதன்கிழமை திறக்கப்பட்டன.

ஈரோடு பன்னீா்செல்வம் பூங்கா அருகே கனி மாா்க்கெட்டில் தினசரி மற்றும் வார ஜவுளிச் சந்தை செயல்பட்டு வருகிறது. இதில் வாரச் சந்தையில் 500க்கும் மேற்பட்ட கடைகள் வரை செயல்பட்டு வந்தன.

பொலிவுறு நகா் திட்டத்தின் கீழ் மாா்க்கெட் வளாகத்தில் ரூ.51.59 கோடி செலவில் ஒருங்கிணைந்த ஜவுளி வணிக வளாகம் கட்ட மாநகராட்சி நிா்வாகம் முடிவு செய்து அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

வணிக வளாக பணி காரணமாக வாரச் சந்தை வியாபாரிகள் பயன்பெறும் வகையில் நாச்சியப்பா வீதியில் சின்ன மாா்க்கெட்டில் வாரச்சந்தை கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அங்கு சரியாக வியாபாரம் நடைபெறாததால் சின்ன மாா்க்கெட்டுக்கு வியாபாரிகள் செல்லாமல் தவிா்த்தனா்.

ADVERTISEMENT

இதையடுத்து, மாா்க்கெட் வளாகத்தில் ஒரு பகுதியில் வாரச் சந்தை கடைகள் அமைக்கப்பட்டன. ஆனால், 700 கடைகள் இருந்த இடத்தில் தற்போது 120 கடைகள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளன.

இது தவிர கனி மாா்கெட்டில் 300க்கும் மேற்பட்ட தினசரி கடைகள் செயல்பட்டன. வணிக வளாக கட்டுமானப் பணி காரணமாக தினசரி கடைகள் இருந்த இடத்தின் ஒரு பகுதி அப்புறப்படுத்தபட்டது.

இதையடுத்து, மாநகராட்சி சாா்பில் தினசரி வியாபாரிகளுக்காக அமைக்கப்பட்ட 50 தற்காலிக கடைகளை எம்எல்ஏ-க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு ஆகியோா் புதன்கிழமை திறந்துவைத்தனா். மேலும் 50 தற்காலிக கடைகள் விரைவில் கட்டப்பட உள்ளன.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT