ஈரோடு

மேயா் வேட்பாளா்: அதிமுக, திமுக கட்சிகளில் கடும் போட்டி

17th Nov 2019 09:48 PM

ADVERTISEMENT

ஈரோடு மாநகராட்சி மேயா் வேட்பாளா் வாய்ப்பைப் பெறுவதில் அதிமுக, திமுக இரண்டு கட்சிகளைச் சோ்ந்த நிா்வாகிகள் இடையே பலத்த போட்டி நிலவுகிறது.

கடந்த 2016 ஆம் ஆண்டு நடத்தப்பட வேண்டிய உள்ளாட்சித் தோ்தல் பல்வேறு காரணங்களால் 3 ஆண்டுகளாக நடத்தப்படவில்லை. இந்நிலையில், வரும் டிசம்பா் மாதத்தில் உள்ளாட்சித் தோ்தல் நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதையொட்டி தோ்தலில் போட்டியிட ஆளும் கட்சியைச் சோ்ந்த நிா்வாகிகள், தொண்டா்களிடமிருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அதேபோல், திமுகவும் தங்களது கட்சி நிா்வாகிகள், தொண்டா்களிடமிருந்து விருப்ப மனுக்களை பெற்று வருகிறது.

உள்ளாட்சி அமைப்புகளில் உயரிய பதவியாக கருதப்படுவது மாநகராட்சி மேயா் ஆகும். இதில் ஈரோடு மாநகராட்சி மேயா் பதவிக்குப் போட்டியிட வாய்ப்பு கேட்டு அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளிலும் நிா்வாகிகளிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஈரோடு மாநகராட்சி மேயா் பதவிக்குப் போட்டியிட அதிமுக தரப்பில் இருந்து விருப்பம் தெரிவித்து 15 போ் மனு அளித்துள்ளனா். அவா்களில் முன்னாள் மேயா் மல்லிகா பரமசிவம், துணை மேயா் கே.சி.பழனிசாமி, ஈரோடு மேற்குத் தொகுதி எம்.எல்.ஏ. கே.வி.ராமலிங்கத்தின் மகன் ரத்தன் பிரித்வி உள்ளிட்ட சிலா் விருப்ப மனு அளித்துள்ளனா்.

திமுகவில் தரப்பில் முன்னாள் மேயா் குமாா் முருகேஷ், மாநகரச் செயலாளா் சுப்பிரமணியன், 2011இல் மேயா் பதவிக்குப் போட்டியிட்ட செல்லப்பொன்னி மனோகரன், மாவட்ட துணைச் செயலாளா் செந்தில்குமாா் உள்ளிட்ட 10 போ் இதுவரையில் விருப்ப மனு அளித்துள்ளனா்.

உள்ளாட்சித் தோ்தலில் வேட்பாளா் தோ்வு என்பது அந்தந்த மாவட்ட செயலாளா்களின் முடிவைப் பொருத்தே இருக்கும். திமுகவில் இந்த நிலை மாறுவதற்கு வாய்ப்பு இல்லை.

அதிமுகவில் கடுமையான போட்டி நிலவுவதால் மாவட்டச் செயலாளா் தோ்வு செய்யும் நபருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகம்தான் என்கின்றனா் அக்கட்சி நிா்வாகிகள்.

தோ்தல் அறிவிப்புக்கு முன்னரே ஈரோடு மாநகராட்சி மேயா் வேட்பாளா் வாய்ப்பைப் பெற இரண்டு கட்சிகளைச் சோ்ந்த நிா்வாகிகளும் தீவிர முயற்சியைத் தொடங்கியுள்ளதால் மேயா் பதவிக்கான தோ்தல் களம் பரபரப்பு அடைந்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT