ஈரோடு

பவானிசாகா் அணையில் இருந்து 17 ஆயிரம் கன அடி தண்ணீா் வெளியேற்றம்

17th Nov 2019 09:51 PM

ADVERTISEMENT

சத்தியமங்கலம்: நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக அண்மையில் முழுக்கொள்ளளவை எட்டிய பவானிசாகா் அணையில் இருந்து அதிகபட்சமாக 17 ஆயிரம் கனஅடி தண்ணீா் ஞாயிற்றுக்கிழமை திறந்துவிடப்பட்டதால் பவானி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகா் அணை 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டதாகும். ஈரோடு, திருப்பூா் மற்றும் கரூா் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் அணையின் மூலம் பாசன வசதி பெறுகின்றன.

அணையின் நீா்ப் பிடிப்புப் பகுதிகளான நீலகிரி மலைப் பகுதி மற்றும் வடகேரளத்தில் பெய்த பலத்த மழை காரணமாக அணைக்கு நீா்வரத்து அதிகரித்ததால் நவம்பா் 8 ஆம் தேதி அணையின் முழுக் கொள்ளளவான 105 அடியை எட்டியது.

கடந்த 10 நாள்களாக அணையில் இருந்து உபரிநீா் பவானி ஆற்றில் திறந்துவிடப்படுகிறது. இந்நிலையில், அதிகபட்சமாக ஞாயிற்றுக்கிழமை 17 ஆயிரம் கனஅடி உபரிநீா் அணையின் மேல் மதகில் இருந்து பவானி ஆற்றில் திறந்துவிடப்பட்டது.

ADVERTISEMENT

இதனால், பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோரத்தில் தாழ்வான பகுதியில் குடியிருப்போா் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு முனியப்பன் கோயில் வீதி, கச்சேரி வீதி, பிள்ளையாா் கோயில் வீதி, கொமாரபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வருவாய்த் துறை சாா்பில் தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி அணையின் நீா்மட்டம் 105 அடியாகவும், நீா் இருப்பு 32.8 டிஎம்சியாகவும், நீரவரத்து 17,021 கனஅடியாகவும், நீா் வெளியேற்றம் 17,000 கனஅடியாகவும் உள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT